செய்நன்றி மறந்த தண்டட்டி படக்குழு – தவிக்கும் இயக்குநர்
அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் தண்டட்டி.இப்படத்தில், கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.இவர்களோடு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண்குமார் தயாரித்துள்ளார்.

இந்தவாரம் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் இணை இயக்குநரும் பல படங்களில் நிர்வாகத்தயாரிப்பாளராகப் பணி புரிந்த, தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் நிர்வாகத்தயாரிப்பாளராக இருக்கும் செளந்தர் பைரவி.
அதுகுறித்த விவரம்……
இந்தப்படத்தின் இயக்குநர் ராம்சங்கையா, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வருவதற்கு முன்பாக சில படங்களில் இணைஇயக்குநராகவும் பல படங்களில் நிர்வாகத்தயாரிப்பாளராகவும் பணியாற்றி வரும் செளந்தர்பைரவியிடம் இந்தக்கதையைச் சொல்லியுள்ளார். கொரோனா காலகட்டத்தில் சொல்லப்பட்ட இந்தக்கதை செளந்தர் பைரவிக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.
அதேசமயம் படத்தின் உயிர்நாடியான க்ளைமாக்சில் காணாமல் போன தண்டட்டியைக் களவாடியது யார்? என்பதை இயக்குநர் எழுதியதற்கு மாறாக வேறொரு விசயத்தைச் சொல்லியிருக்கிறார் செளந்தர்பைரவி. அது இயக்குநருக்குப் பிடித்துவிட்டது. கதையின் தன்மையையே மாற்றிவிட்டீர்கள் இதை இப்படியே வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
திரைக்கதையில் முக்கியமாற்றத்தைச் செய்தது மட்டுமின்றி இப்படத்தைத் தயாரிக்கவும் முன்வந்த செளந்தர்பைரவி, அதற்கு உதவி கேட்டு, இப்போது தண்டட்டி படத்தில் இணைதயாரிப்பாளராக இருக்கும் வெங்கடேஷை அணுகியிருக்கிறார். அதற்காக இயக்குநர் ராம்சங்கையாவை அவரிடம் அனுப்பி கதையைச் சொல்ல வைத்திருக்கிறார்.
கதையைக் கேட்ட வெங்கடேஷுக்கு மிகவும் பிடித்துப்போனது, உடனே அவர் இயக்குநரிடம் இந்தப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிக்க ஏற்பாடு செய்கிறேன், நீங்கள் செளந்தர்பைரவியிடம் போக வேண்டாம் என்று சொல்ல இயக்குநரும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார்.
அதன்பின், செல்ந்தர்பைரவியின் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார் இயக்குநர்.
மிகவும் தாமதமாக, இந்தப்படம் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாராகிறது என்பதை அறிந்த செளந்தர்பைரவி மிகவும் நொந்துபோய்விட்டாராம்.
ஒரு பக்கம் இயக்குநருடன் திரைக்கதையில் உதவி செய்திருக்கிறார், இன்னொரு பக்கம் தயாரிக்க நினைத்த கதையை அப்படியே இன்னொருவருக்குத் தூக்கிக்கொடுத்தது போல் ஆகிவிட்டதே என்பதே அவருடைய நோதலுக்குக் காரணம்.
செய்தியறிந்து இணைதயாரிப்பாளர் வெங்கடேஷை தொடர்பு கொள்ள முயன்றால் அவர் தொடர்புக்கே வரவில்லையாம். அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் அதற்கும் பதில் இல்லையாம்.
இதனால், இணைதயாரிப்பாளர் வெங்கடேஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் முரளி இராமசாமியிடம் நடந்தவற்றைச் சொல்லிப் புகார் செய்திருக்கிறார்.
இன்னொரு பக்கம், இயக்குநர் சங்க உறுப்பினராக இருக்கும் அவர், இயக்குநர்கள் சங்கத்திலும் புகார் செய்திருக்கிறார்.
திரைப்படங்களுக்கு அடிப்படை நல்ல கதை. அப்படி ஒரு கதையை அடையாளம் கண்டு அதைச் செழுமைப்படுத்தி பல கோடி வியாபாரம் நடக்கும் படமாக மாறக் காரணமாகவும் இருந்த எனக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் போய்விட்டதே என்பது அவருடைய ஆதங்கம்.
நான் இயக்குநரிடமும் தயாரிப்புநிறுவனத்திடமும் பணமோ பொருளோ எதிர்பார்க்கவில்லை. எனக்கான அடையாளத்தைக் கோருகிறேன். இயக்குநர்கள் சங்கத்தில் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட இயக்குநர் ராம்சங்கையா, படத்தில் நன்றி தெரிவிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், இப்போது எல்லா வேலைகளும் முடிவடைந்து விட்டதால் அவர் பெயரைச் சேர்க்கவியலாது என்று சொல்லியதாக அறிகிறேன். இது எனக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று வருந்துகிறாராம்.
தமிழ்ப்பண்பாட்டில் ஒரு பெரிய பங்கு வகித்த தற்போது மறைந்து கொண்டிருக்கும் ஒரு பொருளான தண்டட்டியை மையமாக வைத்து மண்மணத்தோடு கதை எழுதிய இயக்குநர் பண்பாடு இல்லாமல் நன்றி மறக்கலாமா? என்பதே விசயமறிந்தவர்களின் வேதனையாக இருக்கிறது.
– ரவி












