ஆட்டம் போட்ட இந்தி ஹீரோ தூக்கிப் போட்ட தமிழ் இயக்குநர்
சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே, உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களை இயக்கியவர் திருக்குமரன். அப்படங்களுக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், ஜெயம்ரவி, விஷால் ஆகியோரை வைத்துப் படம் இயக்குவதாகச் சொல்லப்பட்டது.
ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்திநடிகர் சல்மான்கானின் உறவினர் ஆயுஷ்சர்மாவை கதாநாயகனாக வைத்து இந்தியில் அவர் ஒரு படத்தைத் தொடங்கினார்.
ஆயுஷ்சர்மாவின் மூன்றாவது படம் அது. முதலிரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதும் சல்மான்கானின் உறவினர் என்பதாலும் ஆயுஷ்சர்மாவுக்கு இந்தித் திரையுலகிலும் இந்தி மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அவருடைய படத்தை திருக்குமரன் இயக்குகிறார் என்பதால் அப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்ததாம்.
படப்பிடிப்பு தொடங்கி சுமார் பதினைந்து நாட்கள் முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இந்நிலையில் திடீரென அப்படத்தைத் தொடர்ந்து இயக்க விருப்பமில்லை என்று சொல்லி தூக்கிப்போட்டுவிட்டு வந்துவிட்டாராம் திருக்குமரன்.

thirukumaran
என்ன ஆச்சு?
படப்பிடிப்பின் தொடக்கத்திலிருந்தே திருக்குமரன் சொல்வதைத் தாண்டி அந்தக்காட்சியை இப்படி வைத்துக் கொள்ளலாம் இந்தக் காட்சியை அப்படி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டேயிருந்தாராம் ஆயுஷ்சர்மா.
ஆர்வக்கோளாறில் இப்படிச் செய்கிறார் போகப்போகச் சரியாகிவிடும் என்று பொறுமை காத்த திருக்குமரன் அதோடு, ஒவ்வொரு காட்சியின் தன்மை அடுத்த காட்சிக்கான இணைப்பு ஆகியனவற்றை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாராம்.
ஆனால் ஆயுஷ்சர்மா மண்டையில் அவை எதுவும் ஏறவில்லை. தொடர்ந்து அவர் சொல்வதையே சொல்லிக் கொண்டிருந்ததோடு படப்பிடிப்புத் தளத்திலும் இயக்குநர் போல் செயல்படத் தொடங்கினாராம்.
கடுப்பான திருக்குமரன், இந்தப்படத்தில் இயக்குவதில் எனக்கு விருப்பமில்லை. கதை திரைக்கதையை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று கடிதமாகவே கொடுத்துவிட்டு சென்னை வந்துவிட்டாராம்.
அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், அவரோ நாய்வாலை நிமிர்த்தவியலாது என்று சொல்லி தெலுங்குநடிகர் கோபிசந்த்தை வைத்து இயக்கவிருக்கும் தெலுங்குப் படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தித் திரையுலகில் படம் இயக்குவது பலரின் கனவு. பெரிய அளவில் வரவேற்பு மற்றும் சம்பளம் கிடைக்கும் என்பதால் நிறையப் பேருக்கு இந்தியில் படம் இயக்க ஆசை. ஆனால் கிடைத்த வாய்ப்பைத் தூக்கிப்போட்டுவிட்டு வந்த திருக்குமரன் குறித்து விசயமறிந்தவர்கள் வியப்படைகிறார்கள்.











