யோகிபாபு மீது படக்குழுவினர் புகார்
யோகிபாபு இப்போது ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதேநேரம் அவரையே கதாநாயகனாக வைத்தும் சில படங்கள் திட்டமிடப்படுகின்றன.
இப்போது அவருக்கு சந்தைமதிப்பு இருப்பதால் அவர் ஏற்கெனவே நடித்திருந்த சில படங்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
அண்மையில் படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து நிறையப் படங்களின் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் யோகிபாபு நடித்த படங்கள் சிலவற்றிலிருந்து குரல்பதிவுக்காக அவரை அழைத்திருக்கிறார்கள்.
அவர்களிடம், உங்கள் படங்களில் நடிக்க எனக்கு மிகக்குறைந்த சம்பளமே கொடுத்துள்ளீர்கள். இப்போது நான் டப்பிங் பேசவேண்டுமானால் எனக்கு ஒரு தொகை கொடுக்கவேண்டும் என்று கேட்டாராம்.
நடிப்பவர்கள் டப்பிங்கும் பேசிக்கொடுப்பதுதான் முறை அதற்காகத் தனியாகப் பணம் கேட்பதா? என்று கொந்தளித்து ஆர்.கே.செல்வமணியிடம் புகார் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக யோகிபாபு மற்றும் படக்குழுவினர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.












