சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு புதிய அனுமதி – நடிகை குஷ்பு நன்றி
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 19 ஆம் தேதி முதல் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மே 11 முதல் படப்பிடிப்புகளுக்குப் பின்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த மே 21 அன்று தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி,20 பேரை வைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டும். படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்பக் கலைஞர்கள் முகக் கவசம் அணிய வேண்டும். படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த அனுமதி கொடுத்த பின்பும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. ஏனெனில் இருபது நபர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது என்றும் குறைந்தது ஐம்பது பேரை வைத்து படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அறுபது நபர்களை வைத்துப் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகை குஷ்பு இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….
எங்கள் நிலையைப் புரிந்துகொண்டு 60 உறுப்பினர்களை வைத்து சின்னத்திரைப் படப்பிடிப்புகளைத் தொடங்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் அமைச்சர் கடம்பூர்ராஜு அவர்களுக்கும் பெரிய நன்றி. இது ஒரு பெரிய நிவாரணம். விதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.











