லோகன் இயக்கத்தில் சுரேஷ்ரெய்னா – வியப்பூட்டும் அறிவிப்பு

மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டதல திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் லோகன்.இவர் இயக்குநராகக் களமிறங்குகிறார்.அவர் இயக்கும் படத்தை புதிய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் தயாரிக்கவுள்ளது.
இந்நிறுவனம், தனது முதல் படைப்பாக புரொடக்ஷன் நம்பர் 1 மூலம் திரைப்பட உலகில் தனது கால்பதித்துள்ளது.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் உள்ள முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள்:
சந்தோஷ் நாராயணன் – இசையமைப்பாளர், சந்தீப் கே.விஜய் – ஒளிப்பதிவாளர்,முத்துராஜ் – கலை வடிவமைப்பாளர்,
ரசூல் பூக்குட்டி – ஒலி வடிவமைப்பாளர் (ஆஸ்கார் விருது பெற்றவர்),சுப்ரீம் சுந்தர் – சண்டைப்பயிற்சி இயக்குநர்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பல முக்கியப் படங்களில் தயாரிப்புப் பொறுப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட டி.சரவணகுமார், இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்கான அறிமுக நிகழ்வு ஜூலை 4 அன்று, திரையுலகப் பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான நிகழ்வாக நடந்தது.
இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மின்னும் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார்.
தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்ட அவர், “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை, இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துகள்” என தனது உற்சாகத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்தார்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, படத்திற்கான வீரர் அறிமுகம், படத்தின் பெயர் கூட அறிவிக்கப்படுவதற்கு முன்பே நடந்தது.
அனைவரும் எதிர்பார்த்த அந்த நடிகர் — சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.அவருடைய திரையுலக அறிமுகம் இந்தப் படத்தின் மூலம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
நிகழ்வில் பேசிய ரெய்னாவிடம்,பெரிய தல எம்.எஸ்.தோனியும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா? எனக் கேட்டபோது, “அவர் தான் அதுக்கு பதிலளிக்க வேண்டும்” எனச் சிரித்தபடி பதிலளித்தார்.
இந்த விழாவில், எடிட்டர் மோகன், இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், நடிகர் சதீஷ், இயக்குநர் விஜய்மில்டன், இயக்குநர் திருக்குமரன், இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இத்தனை திறமைமிக்க அணி மற்றும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் போன்ற உறுதியான ஆதரவு கொண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் என் இயக்குநர் பயணத்தைத் தொடங்குவது ஒரு கனவு நனவாகும் தருணம்,சந்தோஷ் நாராயணன், ரசூல் பூக்குட்டி போன்ற உலகத்தரம் வாய்ந்த கலைஞர்களுடன் வேலை செய்வது சிறப்பான அனுபவமாக இருக்கும் என இயக்குநர் லோகன் உற்சாகமாகத் தெரிவித்தார்.
லோகன் இயக்குகிறார் சுரேஷ் ரெய்னா நடிக்கிறார் என்பது மட்டுமின்றி மேலும் பல வியப்பூட்டும் அறிவிப்புகளை படக்குழு அடுத்தடுத்து வெளியிடவுள்ளது என்கிறார்கள்.
அறிமுகக் காணொலி…