சொர்க்க வாசல் – திரைப்பட விமர்சனம்

நம் உலகத்துக்குள் இன்னொரு உலகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறைச்சாலையை மையமாகக் கொண்ட கதை. சில உண்மை நிகழ்வுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை மற்றும் அதிர வைக்கும் காட்சிகளோடு வெளியாகியிருக்கும் படம் சொர்க்க வாசல்.
செய்யாத குற்றத்திற்காக சிறை செல்கிறார் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி.அங்கு, உயரதிகாரிக்கும் சிறையிலும் தன் இராஜ்யத்தை நடத்தும் மூத்த கைதிக்கும் நடக்கும் அரசியலுக்குள் சிக்க வைக்கப்படுகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைப் படபடப்புடன் சொல்லியிருக்கிறது படம்.
சிறையே புதிது.அதற்குள் குற்றமே செய்யாமல் சிக்கிக் கொண்டதை ஏற்க முடியாமல் தவிக்கும் நேரங்களில் அனுதாபத்தை அள்ளுகிறார் ஆர்.ஜே.பாலாஜி.பட்ட காலிலேயே படும் என்பதைப் போல் மேற்கொண்டு அவர் மீது சுமத்தப்படும் சுமைகளைச் சுமக்கும் காட்சிகளில் பொருத்தமாக நடித்து பாராட்டுப் பெறுகிறார்.மனவலிமையோடு செயல்படுவதற்கு வழிகாட்டும் வேடத்தை ஏற்று பலருக்கு வழிகாட்டுகிறார்.
பிரபல ரவுடி என்கிற பாத்திரத்துக்கு ஏற்ற குரல் மற்றும் உட்ல்மொழியோடு இருக்கிறார் செல்வராகவன்.அவருடைய வேடம்தான் கதையின் மையம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சிறை அதிகாரியாக நடித்திருக்கும் ஷரப்யுதீன்,அதிகாரத்துக்கான அடையாளத்துடன் இருக்கிறார்.துணை அதிகாரியாக நடித்திருக்கும் கருணாஸ், விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், டைகர் மணியாக நடித்திருக்கும் ஹக்கிம்ஷா,முக்கிய வேடத்தில் வரும் பாலாஜி சக்திவேல், சீலன் வேடத்தில் நடித்திருக்கும் அந்தோணிதாசன் தேசுதாஸ், ரவி ராகவேந்திரா, கெண்ட்ரிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாமுவேல் ராபின்சன் ஆகிய நடிகர்கள் கதாபாத்திரத்திற்கேற்ப இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரின்ஸ்ஆண்டர்சன்,கதை உணர்த்த விரும்பும் செய்தியைக் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியர், காட்சிகளின் தன்மையை பின்னணி இசை மூலம் வலிமைப்படுத்தியிருக்கிறார். படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே,படம் தொய்வின்றி நகர உதவியிருக்கிறார். கலை இயக்குநர் எஸ்.ஜெயந்திரன் மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குநர் தினேஷ் சுப்பராயண் ஆகியோரால் நிஜ நிகழ்வுகளைப் பார்க்கும் உணர்வு வருகிறது.
கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோரின் எழுத்துகள் கருத்து வலிமை மிக்கதாக அமைந்திருக்கின்றன.
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்,தன் முதல்படத்திலேயே சமுதாய அக்கறையுடன் கூடிய அழுத்தமான மற்றும் ஆழமான விசயங்களைக் கையிலெடுத்து அவற்றை திருப்திகரமாக கொடுத்திருக்கிறார்.
– இளையவன்