சினிமா செய்திகள்

மல்டி ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயன் – விவரம்

சிவகார்த்திகேயன் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.விட்டு விட்டு நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதம் வரை நடக்க வேண்டியிருக்கிறதாம்.அண்மையில் இப்படத்தின் ஒருகட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.அதற்கு அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்க ஒரு மாதம் ஆகும் என்கிறார்கள்.

இந்நிலையில்,இப்படத்துக்கு அடுத்து டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டோ அல்லது அதற்கு நடுவிலேயோ சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்கிறார்கள்.

டான் பிக்சர்ஸ் படநிறுவனம் தயாரிக்கும் அந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

இவர்கள் நால்வரையும் வைத்து லுக் டெஸ்ட் எனும் புகைப்படப் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார் சுதா கொங்கரா.நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் இது நடக்கவிருக்கிறது என்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக தாடி மீசையுடன் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப்படத்துக்காக அதை மாற்றவேண்டிய தேவை இருக்குமே? என்றால் இல்லையாம்.

சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ஜெயம்ரவி அதர்வா ஆகியோரைம் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே நடிக்க வைத்துப் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

அதனால் இப்போது அவர்கள் இருக்கும் தோற்றத்திலேயே புகைப்படம் மற்றும் காணொலி ஆகியனவற்றை எடுக்கவிருக்கிறார்கள்.

இவற்றை படத்தின் அறிவிப்பு வெளியிடும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தனித்தனி கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி மற்றும் அதர்வா ஆகியோர் ஒரு படத்தில் இணைவதும் அப்படத்தை சுதா கொங்கரா போன்ற பெயர் பெற்ற இயக்குநர் இயக்குகிறார் என்பதும் ஆரோக்கியமான செய்தி.

அதே நேரம் அவர்களை ஒருங்கிணைக்கக் காரணமாக இருந்தது இப்படத்தின் கதையும் திரைக்கதையும் தாம்.அந்தக் கதை தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்ட 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டது என்பது கூடுதல் பலம்.

இது பல நட்சத்திரங்கள் இணையும் ஒரு திரைப்பட்ம் என்பதைத் தாண்டி, தாய்மொழிக்காக உயிரைக் கொடுத்துப் போராடிய தமிழினத்தின் பெருமையை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்று திரைத்துறையினர் சொல்கிறார்கள்.

Related Posts