சினிமா செய்திகள்

சர்கார் கதை திருட்டு சிக்கல் – பாக்யராஜ் பதவியை காவு வாங்கியது

சர்கார் படத்தின் கதைத்திருட்டு சிக்கலில் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று பாக்யராஜ் கூறியதால் பாதிக்கப்பட்ட வருண்ராஜேந்திரனுக்கு நீதி கிடைத்தது.

இந் நிலையில் இயக்குநர் கே.பாக்ய்ராஜ் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை நம்ம சங்கத்துக்கு தலைவரா தேர்ந்தெடுத்தீங்க. நானும் சந்தோஷமா பொறுப்பு ஏத்துக்கிட்டு, மனசாட்சியோட நேர்மையா செயல்பட்றதா உறுதிமொழி ஏத்துக்கிட்டேன். எல்லாம் நல்லபடியாதான் போயிட்டிருந்தது.

திடீர்னு சர்கார் பட சம்பந்தமா சங்கத்துகு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருப்பதா தெரிஞ்சதாலேயே, அவருக்கு நியாயம் வழங்க பொறுப்பில் இருக்கிற முக்கியமானவங்க எல்லோரையும் கலந்து ஆலோசிச்சு நடவடிக்கை எடுத்து , நல்லபடி நியாயமா அதை செயல்படுத்தவும் முடிஞ்சது. ஆனா அதில் பல அசௌகரியங்கள் நான் சந்திக்க வேண்டி வந்தது. அதுக்கு முக்கிய காரணும்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு நேரடியா ஜெயிக்காம நான் நேரடியாக தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்.

சங்கத்துல சில தவறான நடவடிக்கைகள் என் கவனத்துக்கு வந்தது . நிறைய விதிமுறைகளையும் மாத்தி அமைக்க வேண்டி இருக்கு. அதையெல்லாம் சரிசெய்தால் ஒழிய சங்கத்தோட பெயரையும் சங்க உறுப்பினர்களோட நலனையும் காப்பாற்ற முடியாதோன்னு தோணுது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டியதை ஒரு எழுத்தாளனா என்னோட தலையாய கடமையா நினைக்கிறேன்.

அதுக்கு ஒரே வழி நான் உள்பட என்னை மாதிரியே போட்டி இல்லாம பதவிக்கி வந்த எல்லோருமே ராஜினாமா பண்ணிட்டு, முறையா தேர்தல் நடத்தி மறுபடியும் பொறுப்புக்கு வர்றதுதான். ஆனா மற்றவர்கள் நிர்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது.

சங்கம் இருக்கிற நிலைமையில, இப்ப தேர்தல் நடத்தறது, வீண் செலவுன்னு நிறைய பேர் அபிப்ராயப்படலாம். ஆனா சங்கமே வீணாபோறதை விட செலவு வீணாகிறது தப்பில்ல. என்னோட இந்த அபிப்ராயத்தை ஏத்துக்கிறவங்க ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு, அதுக்கப்புறன் தேர்தலை நடத்த முடிவு பண்ணினா, நான் அதுல மீண்டும் தலைவர் பதவியில முறையா நின்னு, மெஜாரிட்டி ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு, தொடர்ந்து கடமையோட செயல்பட்றேன்.

எனக்கு நேர்ந்த அசௌகரியங்கள் என்ன? ஒழுங்கீனங்கள் என்ன என்பதை சங்க நலன் மற்றும் நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பல. அதுமட்டுமின்றி முருகதாஸிடன் நான் கெஞ்சியும் உடன்படாததாலேயே வேறு வழியே இல்லாமல் சன்பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்திம் மிகப்பெரிய படமான சர்கார் படக்கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாக்யராஜின் இந்த முடிவு திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts