November 5, 2025
சினிமா செய்திகள்

விஷால் ஏமாற்றிவிட்டாரென ரவிஅரசு புகார் – விவரம்

விஷால் நடிக்கும் 35 ஆவது படமாக தயாராகும் படம் மகுடம்.

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகிறது.அறிவிக்கும்போது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மட்டும் என்று மட்டும் இருந்த இப்படத்தில் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்திருக்கிறது.

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.படத்தொகுப்பை என்.பி.ஶ்ரீகாந்த் கவனிக்க துரைராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.இந்தப்படத்தின் மூலம் மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஷால் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. அதன் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே, அப்படத்தினை விஷாலே இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின.

தீபாவளியையொட்டி அதை அதிகாரப்பூர்வமாக விஷாலே அறிவித்துவிட்டார்.

ரவி அரசு இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் மகுடம் படத்தின் கதை அவருடையதுதான்.இதனால் சுமார் நான்கு கோடி கொடுத்தால் விலகிக் கொள்வதாக ரவி அரசு சொல்லியிருக்கிறார்.அது அதிகம் என்று எல்லோரும் கருதியதால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் இரண்டரை கோடியை அவருக்கு நட்ட ஈடாகக் கொடுத்து அவரை விலக்கியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னதாக,இப்படத்தை எழுதி இயக்குவதற்காக அவருக்குப் பேசப்பட்டிருந்த சம்பளம் சுமார் ஒன்றரை கோடி என்று சொல்லப்படுகிறது.அவர் முழுமையாக வேலை பார்த்திருந்தால்கூட அதுதான் கிடைத்திருக்கும்.இடையில் நீக்கியதால் அவருக்கு வேலை பார்க்காமலே ஒரு கோடி அதிகமாகக் கிடைத்துவிட்டது என்று சொல்லப்பட்டது.

ஆனால், விஷால் தரப்பு ஒப்புக்கொண்டபடி அந்தப்பணத்தைக் கொடுக்க மறுத்து முதலில் பேசப்பட்ட சம்பளத்தை மட்டும்தான் தருவோம் என்றும், அதில் முன்பணமாகப் பெற்ற தொகை போக மீதியை சில தவணைகளில் தருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதனால் கோபமான இயக்குநர் ரவிஅரசு, இரண்டரை கோடி தருவதாகச் சொல்லி கையெழுத்து வாங்கிவிட்டு இப்போது ஏமாற்றுகிறார்கள் என்று இயக்குநர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறாராம்.

இப்போது விஷால் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி ஆகியோரிடம்இயக்குநர்கள் சங்கம் சார்பாக பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

என்ன முடிவு எடுக்கப்படுகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts