சினிமா செய்திகள் நடிகர்

பேட்ட பாடல் விழாவில் ரஜினி பேச்சும் விமர்சனங்களும்

கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 9 ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன்,ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், விஜய்சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், பாபிசிம்ஹா உட்பட பலர் கல்ந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது….

கஜா புயலால் உயிர் இழந்து, வீடுகள் இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவி செய்யும் நேரம் இது. என் மூலமாகவும், ரஜினி மக்கள் மன்றம் மூலமாகவும் நிறைய உதவிகள் செய்து இருக்கிறோம். இன்னும் செய்கிறோம். இது மிகப்பெரிய பேரழிவு. அரசாங்கத்தால் மட்டும் நிவாரண உதவிகளைச் செய்ய முடியும் என்று நினைத்தால் அது தவறு.

எல்லோரும் சேர்ந்து கைகொடுத்து உதவ வேண்டும் என்று பணம் இருக்கிறவர்களுக்கும், நல்ல மனது இருப்பவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் நடித்துள்ள 2.ஓ படம் உலகம் முழுவதும் வெற்றி அடைந்து இருக்கிறது. இதற்காக அனைத்து மக்களுக்கும் நன்றி. அந்தப் படத்தை உருவாக்கிய இயக்குநர் ‌ஷங்கர், தயாரிப்பாளருக்கே அந்தப் பெருமை சேரும்.

ரோபோட்டை தொடங்கி வைத்தவரே கலாநிதிமாறந்தான். எந்திரன் படத்தின் கதையைக் கேட்காமலேயே அவர் தயாரித்தார். அந்தப் படம் வெற்றி அடைந்தது.

அந்தப்படத்தின் வெற்றிக்காக கலாநிதி மாறன் எனக்கு ரூ.1 கோடி கொடுத்தார்.நான் 165 படம் நடித்துவிட்டேன் இதுவரை யாரும் அப்படிச் செய்ததில்லை. எனக்கு மட்டுமல்ல ஏ.ஆர்.ரகுமான், ‌ஷங்கருக்கும் கொடுத்தார்.

2.ஓ படத்தையும் எடுக்க விரும்பினார்.அந்தப்படம் தொடங்குகிற நேரத்தில் சன் பிக்சர்ஸ் படத்தயாரிப்புகளை நிறுத்தி வைத்திருந்தது.அதனால் அது நடக்கவில்லை.

இப்போது மீண்டும் வந்து என்னை வைத்துப் படம் எடுப்பதாகச் சொன்னார்கள். 2 வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதை சொல்லி இருந்தார். மீண்டும் அவரை அழைத்துப் பேசினேன். முதலில் சொன்னதை விட மீண்டும் கதையை அருமையாக உருவாக்கிச் சொன்னார்.அந்தக்கதை தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தது. அப்படித்தான் ‘பேட்ட’ படம் ஆரம்பமானது.

இதன் கதை, மலைப்பகுதியில் நடக்கும் கதை. அன்புத் தொல்லை காரணமாக தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்தாமல் வட இந்தியாவில் டார்ஜிலிங், டேராடூன் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். அதில் ஜித்து கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டார். சிம்ரன் நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில் கதாநாயகியாக திரிஷா வருகிறார். முக்கியத்துவம் இல்லையே ஒப்புக்கொள்வாரா என்று நினைத்தேன். ஆனால் மகிழ்ச்சியாக நடித்தார்.

விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து இருக்கிறேன். அவரிடம் பழகிய பிறகு அவர் சாதாரண நடிகன் அல்ல ஒரு மகாநடிகன் என்பது தெரிந்தது. ஒவ்வொரு காட்சியிலும் கேள்வி கேட்டு தகவல் அறிந்து புதுசு புதுசாக நடித்தார். அவர் சிறந்த மனிதரும்கூட. அவருடைய சிந்தனை, பேச்சு, நோக்கம் வித்தியாசமாக இருந்தது. மனோதத்துவ நிபுணர் மாதிரி சிந்திப்பார். ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்தேன்.

நான் 43 வருட சினிமா வாழ்க்கையில் பார்த்த 2, 3 தங்கமான மனிதர்களில் ஒருவர் சசிகுமார்.தாடி வைத்த குழந்தை அவர்.

சில குழந்தைகள் எது செய்தாலும் பிடிக்கும். புதுப்புது ஆடை உடுத்தி ரசிப்பார்கள். நான்தான் அந்தக் குழந்தை. இந்தப் படத்தில் என்னை 1980 மற்றும் 1990 காலக்கட்டத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் கொண்டுபோய் விட்டார்.

ரசிகர்கள் என்னை எப்படி பார்க்க ஆசைப்படுவார்களோ அப்படி மாற்றி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்து இருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. திரிஷா அப்போது இருப்பதுபோல் இப்போதும் இருக்கிறார். யோகா பயிற்சி செய்வதாக கூறினார். யோகா மனம் மட்டுமன்றி உடலையும் அழகாக வைத்துக்கொள்ளும். மனம் நிம்மதியாக இருக்கும்.

எக்ஸ்ட்ரா என்பது ஒரு மந்திரம். எக்ஸ்ட்ரா பேசக்கூடாது. எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது. எக்ஸ்ட்ரா தூங்கக் கூடாது. எக்ஸ்ட்ரா அறிவுரை சொல்லக்கூடாது. அப்படி இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

அழகான அருமையான படம் ‘பேட்ட’. படம் பொங்கலுக்கு வருகிறது.

எனது பிறந்த நாள் அன்று நான் வீட்டில் இருக்கமாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினி இவ்வாறு பேசியதற்கு நிறைய விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

உங்கள் படத்துக்கு எக்ஸ்ட்ராவா டிக்கெட் விலை வைக்கக்கூடாது என்றும் சொல்லுங்கள் என்கிற விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது.

Related Posts