நேர்மை குறித்து மனைவிக்குப் பாடம் எடுப்பாரா ரஜினி?
ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்று தன் ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.
யாசினின் நேர்மையைக் கண்டு வியந்த அவரது ஆசிரியர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் நடந்ததைச் சொல்லி பணத்தை ஒப்படைத்தார். யாசினின் செயலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதோடு என்ன வேண்டும் என்று கேட்க, ரஜினியைப் பார்க்க வேண்டும் என்று அவர் சொல்ல, ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
யாசினின் செயலைக் கேள்விப்பட்ட ரஜினி உடனே பார்க்க நேரம் ஒதுக்கினார். இன்று யாசின் தன் பெற்றோருடன் ரஜினியை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு ரஜினி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”சிறுவன் முகமது யாசினின் செயலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பணம்னு சொன்னால் பொணம்கூட வாயைத் திறக்கும் என்று சொல்வார்கள். கொஞ்சப் பணத்துகே எல்லோரையும் ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது, கொலை செய்வது என பல்வேறு சம்பவங்கள் நடைபெறும் இந்த நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்த போது ‘அது என் பணம் இல்லை. நான் உழைத்து சம்பாதித்த பணம் இல்லை’ என்று திருப்பிக் கொடுத்தது மிகப் பெரிய குணம். அந்தச் சிறுவனை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை. அவரை நேர்மையாக வளர்த்திருக்கும் பெற்றோரை வாழ்த்துகிறேன்.
யாசின் அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். அங்கேயே படிக்கட்டும் என்று அவரது பெற்றோரிடம் கூறியுள்ளேன். யாசின் என்ன படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் நான் படிக்க வைக்கிறேன். என் பையனாக நான் வளர்க்கிறேன். யாசின் போன்றவர்கள் சிறந்த முன்மாதிரி. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். காமராஜர் பிறந்த நாளில் யாசினை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றார்.
ரஜினியின் இந்தச் செயலுக்கு வரவேற்பு இருந்தாலும் கூடவே விமர்சனமும் வருகிறது.
சாலையில் கண்டெடுத்த ரூ.50 ஆயிரத்தை காவல்துறை வசம் ஒப்படைத்த சிறுவனின் நேர்மையை பாராட்டி தங்க செயின் அளித்ததோடு, கல்விச்செலவையும் ஏற்பதாக அறிவித்திருக்கிறார் ரஜினி.
இதைவிட முக்கியமான விசயம் ஒன்றை ரஜினி செய்ய வேண்டியிருக்கிறது.
நீதிமன்றமே உத்தரவிட்டும் ஆட்பீரோ நிறுவனத்துக்கு தர வேண்டிய பணத்தை திருப்பித்தராத, பள்ளி இடத்துக்கு வாடகைப்பணம் செலுத்தாத, ஊழியர்களுக்கு சம்பளம் தராத, மாநகராடசி இடத்துக்கு வாடகை தராத.. தனது மனைவி லதாவிடம் நேர்மை குறித்து ரஜினி பாடம் எடுக்க வேண்டும்
என்பது உட்பட பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன.











