சினிமா செய்திகள்

மாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி

20 ஆண்டுகளாக சுமார் 200 படங்களுக்கு மேல் விநியோகம் செய்த அனுபவம் மற்றும் திரையரங்குகள் நடத்திய அனுபவம் ஆகியனவற்றிற்குப் பிறகு திரைப்ப்டத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார் முருகானந்தம்.

இவருடைய ராக்போர்ட் எண்டர்டெயிட்மெண்ட் நிறுவனம் இப்போது நேரடியாகப் படத்தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது.

அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் மற்றும் பிசாசு 2 ஆகிய படங்களை நேரடியாகத் தயாரிப்பதோடு இரண்டாம் குத்து,ஐஸ்வர்யா முருகன் உட்பட பல படங்களின் தமிழ்நாடு திரையரங்க வெளீயீட்டு உரிமையைப் பெற்றிருக்கும் முருகானந்தம் உடன் ஒரு சந்திப்பு…..

1. திரைப்படத் தயாரிப்பு மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படும் நேரத்தில் நீங்கள் தயாரிப்பில் இறங்கத் துணிந்தது எப்படி?

நல்ல படங்களைச் சரியாக மார்க்கெட்டிங் செய்தால் வெற்றி நிச்சயம் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். எனவே நம்பிக்கையுடன் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறேன்.

2,விநியோகஸ்தர்களின் ரீஃப்ண்ட், திரையரங்கு வசூலில் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியன குறித்து..?

ஒரு படம் நன்றாக ஓடும் என்று நம்பி வெளீயிடுகிறோம். அது தப்பாகிவிட்டால் ரீஃப்ண்ட் கொடுக்கவேண்டி வரும். நாம் தொடர்ந்து இந்த வியாபாரத்தில் இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் சரி செய்துவிடலாம்.

திரையரங்கு வசூலைப் பொறுத்தவரை எங்காவது ஒரு சில இடங்களில் வசூலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது.

3.திரையரங்குக்காரர்கள் வசூல் தொகையைப் பல மாதங்கள் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

முதல்நாள் வசூலை அடுத்த நாளே தருகிறவர்களும் இருக்கிறார்கள். மாதக்கணக்கில் இழுக்கிறவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் தொழில் செய்தாக வேண்டும்.

4.நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் திரைப்படத் தொழில் நசிவதாகச் சொல்லப்படுவது பற்றி..?

உண்மைதான், சில படங்களில் படத்தின் மொத்தச் செலவைக் காட்டிலும் நடிகரின் சம்பளம் அதிகம் என்றாகிறது. அங்கு தொடங்குகிற சிக்கல் திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கச் சொல்வதுவரை வந்து நிற்கிறது.
தயாரிப்பாளர்களுக்குள் முழுஒற்றுமை ஏற்பட்டால்தான் இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.

5.நீங்கள் தயாரிக்கும் படங்கள் பற்றி…?

குருதி ஆட்டம் படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.

6.வாங்கி வெளீயிடும் படங்கள் மற்றும் விநியோகம் செய்யும் படங்கள் எவை?

மாஸ்டர் படத்தின் கோவை வெளியீட்டு உரிமை பெற்றிருக்கிறோம்.பூமி படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர்த்து தமிழக உரிமை பெற்றிருக்கிறோம்.

ஐஸ்வர்யா முருகன், மாயபிம்பம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, எஃப் ஐ ஆர் மற்றும் இரண்டாம் குத்து ஆகிய படங்களீன் தமிழக உரிமை பெற்றிருக்கிறோம்.

7. நீங்கள் வெளீயிடும் இரண்டாம்குத்து சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறதே?

இயக்குநரின் முந்தைய படங்கள் வெற்றி மற்றும் அதனுடைய பட்ஜெட் போன்ற விசயங்களைப் பார்த்துத்தான் படங்களை வாங்கி வெளியிடுகிறோம். நான் படம் பார்க்கவில்லை.

8. சர்ச்சை வந்துவிட்டபின் படத்தில் மாற்றம் செய்யப்போகிறீர்களா?

அது முழுக்க முழுக்க இயக்குநரின் உரிமை. அதில் நான் தலையிடமாட்டேன்.

9.உங்களுக்கு சமுதாயப் பொறுப்பு இல்லையா?

இருக்கிறது. எங்கள் வியாபாரத்தில் அத்திபூத்தாற்போல் இதுபோன்ற சிக்கல்கள் வருவதுண்டு.அவற்றைச் சரி செய்து வெளீயிடுவோம்.

10.பூமி படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர தமிழக விநியோக உரிமை பெற்றிருக்கிறீர்கள். அது நேரடியாக இணையத்தில் வெளீயாகும் என்று சொல்லப்படுகிறதே?

அதுகுறித்து தயாரிப்பாளருடன் பேசியிருக்கிறோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

11.மாஸ்டர் பட வெளியீடு தாமதமாகிறதே. அதனால் பொருளிழப்பு ஏற்படும் அல்லவா?

இந்த விசயம் தொடர்பாக தயாரிப்பாளர் லலித்குமார் அக்கறையுடன் இருக்கிறார். யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் செய்துகொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

-ராம்

Related Posts