September 7, 2024
செய்திக் குறிப்புகள்

பொன்மகள் வந்தாள் செய்த சாதனை

ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் முன்னோட்டம், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.

2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நிறைந்துள்ளனர்.

ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ்த் திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.

இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சன் டிவி, கே டிவி, ஸ்டார் விஜய் டிவி, சன் நியூஸ், சிஎன்என் நியூஸ் 18 தமிழ், ஜீ தமிழ் உட்பட முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் ஒளிபரப்பானது. இதோடு சேர்த்து, ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. 24 மணி நேரத்தில் 60 இலட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது.

200-க்கும் அதிகமான நாடுகளில், பிரத்யேகமாக ப்ரைம் உறுப்பினர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் ‘பொன்மகள் வந்தாள்’ ஸ்ட்ரீமிங்கில் காணக்கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts