பத்துதல – திரைப்பட விமர்சனம்
இதிகாசத்தில் இராமனை எதிர்ப்பவன இராவணன்.இந்த பத்துதல யில் அரசியல் இராமர்களை எதிர்க்கிறார் இராவணன்.
பத்துதல என்கிற பெயர் வைக்கக் காரணம் படத்தில் சிம்புவின் பெயர் ஏ.ஜி.இராவணன் என்பதுதான்.
அதற்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார் சிம்பு.
அன்பும் பாசமும் நிறைந்த அழகான வாழ்க்கையிலிருந்து கரடுமுரடான வாழ்க்கைக்குள் வந்தாலும் அடிமனசின் ஈரம் காயாத வேடம் சிம்புவுக்கு.
கவுதம்கார்த்திக், சந்தோஷ்பிரதாப் ஆகியோருடனான சிம்புவின் காட்சிகளும் வசனங்களும் பல அர்த்தங்கள் பொதிந்தவை.தனிப்பட்ட சிம்புவுக்கும் நூறு சதம் பொருந்துபவை. அதனால் மனிதர் புகுந்துவிளையாடியிருக்கிறார்.அக்கரயில பாடலில் அவரது செயல் இரசிகர்களுக்கு விருந்து.
கவுதம்கார்த்திக்கின் துடிப்பான நடிப்பும் அவருடைய இரகசியம் நிறைந்த கதாபாத்திரமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
பிரியாபவானிசங்கர் பாத்திரம் சிறியதென்றாலும் நிறைவாக அமைந்திருக்கிறது.
இதுவரை பல படங்களில் அதிகாரதோரணையுடன் நடித்து வந்த கவுதம்மேனன், அரசியல்வாதியாகவும் நன்றாகப் பொருந்தியிருக்கிறார்.
சந்தோஷ்பிரதாப், அனுசித்தாரா, மதுகுருசாமி, ஜோ.மல்லூரி,இயக்குநர் கிருஷ்ணா ஆகியோர் தேவையான அளவு நடித்திருக்கிறார்கள்.
வசனம் பேசுவது மட்டுமே நடிப்பென நினைத்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன்.
ஒரு பாடலுக்கு நடனமாடும் சாயிஷாவிடம் இளைஞர்களைக் கவரும் இளமைத்துள்ளல்.
பரூக்கின் ஒளிப்பதிவு சிம்புவின் கதாபாத்திரத்தை பன்மடங்கு உயர்த்திக்காட்டியிருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை ஒரு கதாபாத்திரம் போல கதைக்குப்பலம் சேர்த்திருக்கிறது.
முப்தி என்கிற கன்னடப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டாலும் தமிழ் அலைவரிசை தெரிந்து செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் இயக்குநர் கிருஷ்ணாவின் திறமைக்குச் சான்று.
பத்துதல – கெத்துதல
– ஆநிறையன்











