இணையதள விமர்சனங்களுக்கு எதிரான தயாரிப்பாளர்கள் சங்க மனு தள்ளுபடி – விவரம்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு இணையதளங்களில் வெளியாகும் விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டும்.ஏனெனில், எதிர்மறையான விமர்சனங்களால் படம் தோல்வியடைந்து நட்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது….
நீதிபதிகளைப் பற்றிக் கூட மக்கள் எதிர்மறையான விமர்சனங்களை வழங்கும் காலத்தில் உள்ளோம். சமூக ஊடகங்களில் எப்படி தன்னை விமர்சித்திருக்கிறார்கள் என்று போய்ப்பாருங்கள். அதையெல்லாம் நம்மால் தடுக்கமுடியாது.பிரபல சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்வது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும்.
தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை முன்கூட்டியே முடக்க முயற்சிக்கக் கூடாது. மனுதாரரின் கோரிக்கையை இந்த நீதிமன்றத்தால் ஏற்கமுடியாது.
சமூக ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களால், யாரையும் தடுக்க முடியாது. நீங்கள் இங்கே ஒருவரை தடுத்தால், அஜர்பைஜானைச் சேர்ந்த மற்றொருவர் அதைச் செய்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?.
இதுதொடர்பாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தாலும், அந்த உத்தரவை எவ்வாறு செயல்படுத்த முடியும்? செயல்படுத்த முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இன்று, முழுஉலகமும் சமூகஊடகங்களின் பிடியில் உள்ளது. இதுபோன்ற கருத்துகளைத் தடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு திரைப்படத்தைப் பற்றிய கருத்து நபருக்கு நபர் மாறுபடும். சிலர் ஒரு திரைப்படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனம் செய்வதால், அதுவே மற்றவர்கள் படத்தைப் பார்த்து தங்கள் சொந்த முடிவுக்கு வருவதைத் தடுக்காது
இவ்வாறு தெரிவித்த நீதிபதி,தயாரிப்பாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.











