கெளதம்மேனன் சிம்பு படத்தின் படப்பிடிப்பு – தொடரும் தடை
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் உள்ள சிக்கல் நீடிக்கிறது.
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம், அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
இந்தப் புகார் குறித்து விசாரிக்கவேண்டும், அதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமுடிவு காணும்வரை சிம்பு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவேண்டாம் என தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் சொல்ல அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.
அதோடு, சிம்பு படக்குழுவினரைத் தொடர்புகொண்டு இந்தச் சிக்கலைத் தீர்க்கும்வரை உங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கமாட்டோம் என்றும் சொல்லிவிட்டார்களாம்.
இச்சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.நேற்று (ஆகஸ்ட் 2,2021) காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
இப்பேச்சுவார்த்தையில்,தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் சிம்பு சார்பாக அவருடைய அம்மா உஷாராஜேந்தர் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
அப்போது,பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் சிக்கல்கள் குறித்து உஷாராஜேந்தரிடம் எடுத்துச் சொல்லப்பட்டதாம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட உஷாராஜேந்தர், வீட்டுக்குப் போய் சிம்புவிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
அவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கும்வரை சிம்பு படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்கிற முடிவும் தொடர்கிறதாம்.











