ஃபேமிலி மேன் 2 தொடரை நிரந்தரமாக நீக்கவேண்டும் – நடிகர் சங்கத் துணைத்தலைவர் கருணாஸ் அறிக்கை
ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள்.
இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதையொட்டி உலகெங்கும் உள்ள முக்கிய 8 ஈழ்த்தமிழ் அமைப்புகள், தமிழக மக்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள். “திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆதரவளித்துள்ளனர். ஈழத் தமிழர்களை மோசமாக காண்பிக்கும் இது போன்ற திரைப்படங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும், இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்றும், தயாரிக்க வேண்டாம் என்றும் ஒரு சுற்றறிக்கையை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதியிருந்தனர்.
இதற்கு விடையளிக்கும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத்தலைவர் நடிகர் கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்…
தமிழர்களுக்கெதிரான மிகப்பெரிய நுண்ணரசியல் திட்டமிடுதலோடு தி ஃபேமிலிமேன் 2 வலைத்தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் 9 அத்தியாயங்களாக வெளிவந்திருக்கிறது. தமிழீழ தேசிய இன விடுதலை இலட்சியத்தோடு பயணித்த விடுதலைப்புலிகளின் நோக்கத்தை அவர்களின் நேர்மையை அவர்களின் ஈகத்தை அவர்களின் போர் அறத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு இந்த வலைத்தொடரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மது, புகை தடை செய்யப்பட்ட ஒரு தூய விடுதலை இயக்கத்தை தமிழ்த் தேசியத் தலைவர் உள்ளிட்ட அமைப்பில் உள்ள முகாமையான தலைவர்கள் அனைவரும் மது அருந்துவது போலவும் கெட்ட வார்த்தைகளைச் சரளமாகப் பேசுகிறவர்கள் போலவும் சித்தரித்து இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல கடும் கண்டனத்துக்குரியது.
ஈழவிடுதலைக்காகப் போராடிய மாவீரர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வதன் மூலம் உலகில் எல்லாத் தளங்களிலும் தமிழர்களை ஓரங்கட்ட வேண்டும் என்பதுதான் இந்த வலைத்தொடரின் நோக்கம்.அதுமட்டுமல்ல தமிழினம் மீண்டும் புத்தெழுச்சி பெற்றுவிடக்கூடாது என்கிற தொலைநோக்கோடு திரைப்படங்கள் ஊடாகவும் சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் தமிழர்களுக்கெதிரான விசமத்தனங்களைப் பரப்பி உலகெங்கும் உள்ள தமிழர்களை உளவியல் ரீதியாக ஒடுக்கிவிடுவது, இதன் ஒரு பகுதியாகத்தான் ஈழத்தமிழர்களுக்கெதிரான திரைப்படங்களை ஃபேமிலிமேன் 2 போன்ற வலைத்தொடர்களை உருவாக்க முனைகிறார்கள். இது மேலும் தொடராமல் தடுக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் இந்தியாவின் எதிரிகள் என்கிற கருத்துருவாக்கத்தை இலங்கையும் இந்திய உளவுத்துறையும் இணைந்து நுட்பமாக உலகெங்கும் பரப்பத் திட்டமிட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சிதான் இந்த ஃபேமிலிமேன் 2 வலைத்தொடர், தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே, அமேசான் பிரைம் நிறுவனம் அதன் தளத்திலிருந்து நிரந்தரமாக இந்த ஃபேமிலிமேன் 2 வலைத்தொடரை நீக்கவேண்டும்.அதற்கான அழுத்தத்தை உலகத் தமிழினம் ஒருங்கிணைந்து கொடுக்கவேண்டும்.தமிழர்களுக்கெதிரான கலைப்படைப்புகளை யார் செய்தாலும் அதற்கு நான் சார்ந்திருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்யும் என்பதையும் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம் என்பதையும் இந்த அறிக்கையின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்ஙனம்
கருணாஸ், துணைத்தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












