கவின் கொடுத்த ஒத்துழைப்பு – படக்குழு மகிழ்ச்சி
நடிகர் கவின் நடித்துள்ள ப்ளடிபெக்கர் படம், தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இதற்கு முன்னதாக,நடன இயக்குநர் சதீஷ் நடிப்பில் கவின் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.
அதன்பின், புது இயக்குநர் விஷ்ணுஎடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் கவின்.அதோடு,அவர் நடிக்கும் இன்னொரு படத்தின் பெயர் மாஸ்க்.
இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் மாஸ்க்.அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார்.
கவின் நாயகனாக நடிக்கும் மாஸ்க் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
மாஸ்க் படத்தின் பணிகள் பூஜையுடன் மே மாதம் 17 ஆம் தொடங்கியது.அம்மாத இறுதியிலேயே அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.
தொடங்கியதிலிருந்து சின்னச் சின்ன இடைவெளிகள் விட்டு தொடர்ந்தது படப்பிடிப்பு.சுமார் நான்கரை மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையவிருக்கிறது என்கிறார்கள்.
இன்னும் சில நாட்களில் அதாவது அக்டோபர் பதினைந்தாம் தேதியோடு அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிடும் என்றும் அதன்பின் படத்தைத் தொகுத்துப் பார்த்து தேவைப்பட்டால் மேலும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில்,இப்படத்தின் இயக்குநர் விகர்ணன் அசோக், நடிகர் கவினைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறாராம்.படப்பிடிப்புக்காகக் கொடுத்த தேதிகளில் குழப்பம் ஏதும் இன்றி வந்துவிடுவது, படப்பிடிப்புத் தளத்தில் வந்து, இந்தக் காட்சி எதற்கு? ஏன் இப்படி வைக்கிறீர்கள்? இந்த வசனம் தேவையா? இதை மாற்றுங்கள் என்று எதுவும் சொல்லாமல் இயக்குநர் சொன்னபடி கேட்டு நன்றாக நடித்திருக்கிறாராம்.
கவின் கொடுத்த இந்த ஒத்துழைப்பால்தான் வேகமாகப் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது என்று இயக்குநர் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும், கவின் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் நேரத்தில் வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேமிராவுக்குப் பின் நின்று வேலை பார்த்துக் கொண்டிருப்பேன்.படக்குழுவுடன் அவ்வளவு நன்றாக இணைந்து பணியாற்றுகிறார் என்று புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறாராம்.
இப்படி ஒரு நற்பெயரைப் பெறுவது கவினின் வளர்ச்சிக்கு மென்மேலும் வித்திடும் என்பதில் மாற்றமில்லை.











