கமலுக்கு சுகா தனுஷுக்கு மாரிசெல்வராஜ் – அசுரன் பட நிகழ்வு
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இநதப்படத்தின் கதை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கிறது. இப்படத்துக்கான குரல்பதிவை தனுஷ் முடிக்கவில்லை.
அதற்குள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக இலண்டன் சென்றுவிட்டார் தனுஷ்.
இதனால் அசுரன் படக்காட்சிகளை இலண்டனுக்குக் கொண்டு சென்று தனுஷின் குரல்பதிவை அங்கேயே முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.
இதற்காக இயக்குநர் மாரிசெல்வராஜ் இலண்டன் செல்கிறார். இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் தானே? மாரிசெல்வராஜ் எதற்குச் செல்லவேண்டும்?
காரணம் இருக்கிறது.
இப்படத்தின் கதை தென்மாவட்டங்களில் நடப்பதால் கதாபாத்திரங்கள் அம்மாவட்ட வட்டார வழக்கு மொழியில் பேசவேண்டும்.வெற்றிமாறனுக்கு அதில் பரிச்சயம் இல்லை என்பதால் அம்மொழியை நன்கறிந்த மாரிசெல்வராஜை வைத்து படத்தின் மொத்த குரல்பதிவையும் செய்திருக்கிறார்களாம்.
தனுஷுக்கும் வட்டாரவழக்குச் சொற்களை அறிமுகப்படுத்தி அவற்றை உச்சரிக்கும் முறையையும் சொல்லிக்கொடுக்கவே மாரிசெல்வராஜ் செல்கிறாராம்.
கமல் நடித்த பாபநாசம் படத்தில் திருநெல்வேலி வட்டார வழக்கைப் பிழையின்றிப் பேசுவதற்காகவே இயக்குநர் சுகாவைப் பயன்படுத்தினார் கமல்.
இப்போது அசுரன் படத்தில் அதே தேவைக்காக மாரி செல்வராஜை பயன்படுத்துகிறார் தனுஷ்.










