தள்ளிப் போனது சிவகார்த்திகேயனின் மாவீரன் – காரணம் என்ன தெரியுமா?
மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.
சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. பல தடைகளைத் தாண்டி அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தப்படத்தை ஜூன் 29 வியாழக்கிழமையன்று வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் நடந்துவந்தன.
இப்போது அந்த வெளியீட்டுத் தேதியில் மாற்றம் நடந்திருக்கிறது.
அதற்குக் காரணம் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படம்தான் என்கிறார்கள்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்தப்படத்தை மே 19 ஆம் தேதியன்று வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகளை வேகப்படுத்தியிருந்தார்கள்.
ஆனால் மே 19 ஆம் தேதிக்குள் படம் தயாராகாது என்கிற நிலை. இயக்குநர் மாரிசெல்வராஜ் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மேலும் பல நாட்கள் தேவை என்று கேட்டிருக்கிறார். அதனால் அவருடைய கோரிக்கைக்கு ஏற்ப பட வெளியீட்டை சுமார் நாற்பதுநாட்கள் தள்ளி ஜூன் 29 ஆம் தேதி என்று மாற்றிவிட்டார்கள்.
இதனால் ஏற்கெனவே ஜூன் 29 என்று திட்டமிட்ட மாவீரன் படத்தை மேலும் தள்ளிப் போட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
அதற்குக் காரணம் மாவீரன் படத்தையும் ரெட்ஜெயண்ட் நிறுவனமே வெளியிடவிருப்பதுதான்.
மாமன்னன் படமும் அவர்களுடையது மாவீரனும் அவர்களுடையது என்பதால் மாவீரனை ஒரு மாதம் தள்ளி வைத்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இப்போது ஜூலை 28 ஆம் தேதி மாவீரன் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
இம்முறை மாற்றம் ஏதும் இருக்காது என்று நம்பலாம்.











