சினிமா செய்திகள்

தனிவிமானம் பலகோடி செலவு – இந்தியத் திரையுலகை வியக்க வைக்கும் தமிழ் நடிகர்கள்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின்செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று வெளியாகி பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம்ரவியும் நடித்துள்ளார்கள். இவர்களோடு த்ரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், ஜெயராம் உட்பட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.

தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத உச்சகட்ட வசூலை இந்தப்படம் பெற்று சாதனை புரிந்தது.

இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம்பாகம் இம்மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்காக, முதல்பாகம் வெளியானபோது விளம்பரத்திற்காக படத்தில் நடித்த நடிகர்கள் கொடுத்த ஒத்துழைப்பு பெரிதாக இருந்தது.

இரண்டாம்பாகத்துக்கும் அது தொடர்கிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் சுமார் பதினைந்து நாட்கள் இப்படத்தின் விளம்பரப்பணிகளுக்காக ஒதுக்கியுள்ளனர்.

இவர்களோடு அவ்வப்போது சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

சென்னையில் தொடங்கிய இந்த விளம்பரப் பயணம் இன்று டெல்லியில் மையம் கொண்டது. அதைத் தொடர்ந்து மும்பை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு இக்குழு பயணம் மேற்கொள்ளவிருக்கிறதாம்.

இதற்காக ஒரு தனிவிமானத்தை தயாரிப்பு நிறுவனம் வாடகைக்கு எடுத்து வைத்துள்ளது. அதற்கு மட்டும் சுமார் மூன்றுகோடி வாடகை என்று சொல்லப்படுகிறது.

இதுதவிர அந்நடிகர்கள் தங்கும் செலவு உணவுசெலவு உதவியாளர்களுக்கான செலவு ஆகியவைக்கும் பெரும் செலவு பிடிக்கிறது என்கிறார்கள்.இவற்றை லைகா நிறுவனம் செய்கிறது.

ஆனாலும், படத்தை விளம்பரப்படுத்த எல்லா நடிகர்களும் முன்வந்திருப்பதே நல்ல விசயம் என்றும் இது ஒரு திரைப்படத்திற்கான விளம்பரம் மட்டுமன்று தமிழர்களின் வீரத்தையும் வாழ்வியலையும் பறை சாற்றுகிற படைப்பு என்பதால் இதை உயர்த்திப்பிடிப்பது ஒரு படத்தை உயர்த்துவதன்று ஓர் இனத்தை உயர்த்துவது எனப் பலர் பாராட்டிவருகின்றனர்.

அதோடு இந்தியத் திரைத்துறையினர் பொன்னியின்செல்வன் குழுவின் இந்த விளம்பரப்பயணத்தை அறிந்து வியந்துபோய் நிற்கிறார்களாம்.

முன்பெல்லாம் ஒரு படத்தை விளம்பரப்படுத்த எடுத்துக்காட்டாக இந்தி நடிகர் நடிகையரைச் சொல்வார்கள் இப்போது தமிழ் நடிகர்களைச் சொல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.

Related Posts