2021 ஆம் ஆண்டிற்கு நன்றி – கவிஞர் கபிலன் நெகிழ்ச்சி
கொரோனா எனும் கொடுந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 2020 இல் தொடங்கியது 2022 இலும் தொடர்கிறது.
இதனால் நிகழ்காலம் குலைந்து எதிர்காலம் பற்றிய பயத்தில் உலகின் பொதுப்புத்தி உறைந்திருக்கிறது.
இப்பூகம்ப நாட்களிலும்பூக்கள் பூத்துக்கொண்டுதானிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் பாடலாசிரியர் கபிலன்.
2021 ஆம் ஆண்டு அவருக்குப் பல புதிய பெருமைகளைப் பரிசளித்துச் சென்றிருக்கிறது.

இவ்வாண்டில் மட்டும் ஏ.ஆர்.ரகுமானுடன் ஐந்து படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அவற்றில், ஏ.ஆர்.ரகுமானின் சொந்தத் தயாரிப்பில் உருவான 99 சாங்ஸ் மற்றும் தனுஷ் நடித்த கலாட்டா கல்யாணம் ஆகியவை வெளியாகிவிட்டன.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், சிம்பு நடிக்கும் பத்துதல, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகியவை வரவிருக்கின்றன.
ஹாரிஸ் ஜெயராஜோடு மும்பைக்குப் பறந்து பாடல்பதிவில் கலந்துகொண்டதும் கடந்த ஆண்டில் நடந்திருக்கிறது. அப்பாடல்கள் வெளியாகும்போது அதன் உயரம் புரியும்.
ஜி.வி.பிரகாஷ் இசையில், ஜெயில் படத்தில் இவர் இயற்றி தனுஷ் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் கடந்த ஆண்டின் வெற்றிப்பாடல்கள் பட்டியலில் முன்நிற்கிறது.
அதேபோல, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் இடம்பெறும்,கார்த்திக் ராஜா இசையில் சித்ஶ்ரீராம் பாடியுள்ள, உச்சந்தல ரேகையிலே எனும் பாடல் வெளியாகி கபிலனுக்குப் புகழ் சேர்த்தது.
நேரடியாக இணையத்தில் வெளியாகி மாபெரும் வரவேறபைப் பெற்ற பா.இரஞ்சித்தின் சார்பட்டாபரம்பரை படத்தில் இடம்பெற்ற வம்புல தும்புல பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததோடு அப்பட நாயகன் பெயரையும் கபிலன் என வைத்து பாடலின் நடுவே, கபிலா பிச்சிட்டே பிச்சிட்டே என வசனம் வைத்து அவருக்குப் பெருமை சேர்த்தது படக்குழு.
தமிழகத்தின் முன்னணி வார ஏடான ஆனந்தவிகடனில் வெளியாகும் ‘தாழ் திறவாய்’ எனும் தலைப்பிலான கவிதைத்தொடர் அவருடைய மனதின் பல கதவுகளை மக்களுக்குக் காட்டும் வகையில் இருப்பதோடு உலகின் பல இடங்களிலுமிருந்து அவருக்குப் பாராட்டுகள் கிடைக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.
முத்தாய்ப்பாக ஆண்டிறுதியில் அதாவது டிசம்பர் 28 ஆம் தேதியன்று வரும் அவர் பிறந்தநாளில் அவர் பெருமிதம் கொள்ளும் இரு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.

ஒன்று பா.இரஞ்சித் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை நிகழ்வில் அவருடைய பிறந்தநாளை வெகுமக்கள் முன்பு வெகுவிமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தது.
இன்னொன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிப் புத்தகங்கள் பரிசளித்தது.
வாழ்வாதாரம் குறித்த மக்கள் மனவுறுதியைக் குலைக்கும் ஏராளமான செய்திகள் உலாவரும் நேரத்தில் கவிஞர் கபிலனின் புதிய உச்சங்கள் அவருக்கு மட்டுமின்றி அனைவருக்குமான ஊக்க மருந்தாக அமைந்திருக்கின்றன.
இவற்றைப் பற்றி அவரிடம் கேட்டால், ஓராண்டில் இவ்வளவு நடந்திருக்கிறதா? என்னைப்பற்றி எனக்கே தெரியப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி, இவ்வளவைக் கொடுத்த 2021 க்கு நன்றி என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
இவற்றோடு இவ்வாண்டில் முப்பதுக்கும் மேற்பட்ட புதிய படங்களுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பும் 15 க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களில் பாடல் எழுதும் வாய்பும் வந்திருக்கிறது எனும் தகவலைச் சொல்லி மகிழ்கிறார் .
2022 இலும் அவருடைய சாதனைப்பயணம் தொடர வாழ்த்துவோம்.









