வித்யாசாகர் மகனை இயக்கும் லிங்குசாமி – புதிய தகவல்கள்

ந.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா.
அந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன.
வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இயக்குநர் ந.லிங்குசாமியே இயக்கவுள்ளார்.
மீண்டும் கார்த்தியையே நடிக்கவைக்க முயன்றார். அது நடக்கவில்லை என்றதும் ஆர்யாவை அணுகினார் ந.லிங்குசாமி.
கதை கேட்டு சம்மதம் சொன்ன ஆர்யா, அதன்பின் நடந்த சம்பளம் உள்ளிட்ட மற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்பாடு ஏற்படாததால் பையா 2 வில் நடிக்கவியலாது என்று சொல்லிவிட்டார்.
அதன்பின் பையா 2 படத்தின் கதை குறித்து கார்த்தியிடம் பேச இயக்குநர் ந.லிங்குசாமி முயன்றுள்ளார். அந்த முயற்சி வெற்றி பெற்று கார்த்தியைச் சந்தித்திருக்கிறார்.அப்போதும் ந.லிங்குசாமியின் முயற்சி வெற்றிபெறவில்லை.
இதனால், பையா 2 படத்தில் நடிக்க வேறு நாயகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் ந.லிங்குசாமி.
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ், விஷ்ணுவர்தன் இயக்கிய நேசிப்பாயா படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே அவரை, பையா 2 படத்தில் அவரை நாயகனாக்க முடிவு செய்திருந்தார் ந.லிங்குசாமி.
அதுவும் ஒருகட்டத்தில் தோல்வியில் முடிந்து நடக்காமல் போனது.
அதன்பின், மகாபாரதக் கதையை மையமாக வைத்து மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு படத்தை அவர் இயக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.அப்படத்துக்கான கதை விவாதம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வருமென்று சொல்லப்பட்டது.
இப்போது அதுவும் நடக்கவில்லையாம்.
ஒரு புதுமுக நடிகரை வைத்து படமெடுக்கத் திட்டமிட்டு அந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கிறதாம்.
அந்த புதுமுக நடிகர் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்சவர்தன்.அவரை கதாநாயகனாக வைத்துத்தான் அடுத்தபடத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப்படத்தை மும்பையைச் சேர்ந்த பென் மீடியா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.
இது பையா 2 ஆக இருக்குமா? என்றால்,பையா படம் போல் இதுவும் பயணத்தை மையமாகக் கொண்ட காதல்கதை தான் என்றாலும் பையா 2 என்று சொல்லி எடுக்கிறார்களா? இல்லையா? என்பது போகப்போகத் தெரியும் என்கிறார்கள்.
அதைவிட ஆச்சரிய தகவல் ஒன்று உள்ளது.புதுநடிகர் கதாநாயகனாக நடிக்கும் படமென்றாலும் இதன் மொத்தச் செலவுத் தொகை சுமார் இருபத்தைந்து கோடி என்கிறார்கள்.
கதாநாயகனை நம்பி அல்ல, இயக்குநர் லிங்குசாமியை நம்பியே இவ்வளவு பெரிய தொகையை தயாரிப்புநிறுவனம் முதலீடு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா லிங்குசாமி?