கழுகு 2 – திரைப்பட விமர்சனம்
செந்நாய்க் கூட்டம் இருப்பதால் ஒரு காட்டில் உள்ள மரங்களை வெட்ட முடியாத நிலை. ஒருவர் அந்தக் காட்டின் மரங்களை வெட்டும் உரிமையைத் துணிந்து பெறுகிறார். அவருடைய துணிவுக்குக் காரணம், துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்களைப் பாதுகாப்புப் பணிக்கு நியமித்தது தான்.
ஆனால் அவர்கள் வேட்டைக்காரர்களே இல்லை, திருடர்கள் அதுமட்டுமின்றி அவர்களுக்கு துப்பாக்கி சுடவே தெரியாது. அவர்களை நம்பி காட்டுக்குள் போனவர்கள் என்னவாகிறார்கள்? போலி வேட்டைக்காரர்களின் நிலை என்ன? என்பதைச் சொல்லுவதுதான் கழுகு 2.
திருடன் போலி வேட்டைக்கரன் ஆகிய வேடங்களை ஏற்றிருக்கும் நாயகன் கிருஷ்ணா பொருத்தமாக நடித்திருக்கிறார். செந்நாயை நேரில் பார்த்ததும் பயத்தில் அலறுவது, காதல் உணர்வை மறைத்து நடப்பது போன்ற இடங்களில் நடிப்பில் முன்னேறியிருக்கிறார்.
நாயகனுக்கு இணையாகப் படம் முழுதும் வருகிற கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்திருக்கிறார். சிரிக்க வைக்கும் பொறுப்பும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாய்கள்ல ரெண்டு வகை ஒண்ணு டெரர் ,இன்னொன்னு சாஃப்ட் என்று தொடங்கி அவர் எடுக்கும் பாடம் சிரிக்க வைக்கிறது.
நாயகியாக பிந்துமாதவி, அழகான, உறுதியான பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
ஹரீஷ்பேரடி, எம்.எஸ்.பாஸ்கர், ரமா, தாடி வெங்கட், நெல்லை சிவா உள்ளிட்ட பலர் படத்தில் இருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கரின் வேடம் எதிர்பாராததாக இருப்பது படத்துக்குப் பலம்.
ஒரு பாடலுக்கு ஆடும் யாஷிகா ஆனந்த் கவனிக்க வைக்கிறார்.
யுவனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையும் பொருத்தம்.
ராஜாபட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவில் காடுகள் அழகாகக் காட்டப்படுகின்றன.
சத்யசிவாவின் ஒரு வரிக்கதை அழுத்தமில்லாத திரைக்கதை ஆகியன பலவீனம்.முதுமக்கள் தாழி, காட்டுக்குள் ஹெலிகாப்டர் விழுந்துவிட்டது எனும் தேடல், குளிர் நிறைந்த வனத்துக்குள் காஃபி வைக்க கிலோமீட்டர் கணக்கில் போவதெல்லாம் அபத்தம்.
கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கொடுத்த பாத்திரங்களில் பொருத்தமாக நடித்து பலவீனங்களை மறைக்க முயன்றிருக்கின்றனர். ஆனாலும் கழுகு தாழப்பறக்கிறது.











