கவினின் கிஸ் பட வெளியீடு தள்ளிப் போகிறது?

நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் படம் கிஸ். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.
சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார்.ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ் பணியாற்ற, சூர்யா ராஜீவன் கலை இயக்கம் செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது.
தொடங்கும்போது, முழுமூச்சாகப் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள்.விட்டு விட்டு நடந்தாலும் விடாமல் படப்பிடிப்பு நடந்தது.சனவரியில் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.
இப்படம் ஜூலை வெளியீடு என்று ஜூன் மாதம் அறிவித்திருந்தார்கள்.ஆனால் அறிவித்தபடி வெளியாகவில்லை.
இப்போது செப்டம்பர் 19 ஆம் தேதி இப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாளை இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனாலும்,இம்முறையும் சொன்ன தேதியில் அந்தப்படம் வெளியாகாது என்றொரு பேச்சு திரையுலக வட்டாரங்களில் உலவிக் கொண்டிருக்கிறது.
ஏனெனில்?
இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை இன்னும் விற்பனையாகாமல் இருக்கிறதாம்.
திரையரங்க வ்சூலை முழுமையாக நம்பவியலாது என்பதால் வெளியீட்டுக்கு முன்பே இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை விற்பனை செய்துவிட வேண்டும் என்பது தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணம்.
அதுபோலத்தான் இப்பட நிறுவனமும் முயற்சி செய்துவருகிறது.
தொடக்கத்தில்,இப்படத்தின் விலை சுமார் எட்டு அல்லது ஏழு கோடி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.கவின் படங்கள் இந்த விலைக்கு விற்ப்னை ஆகியிருக்கின்றன என்பதால் இந்த விலை சொல்லியிருக்கிறார்கள்.ஆனால்,அவருடைய முந்தைய படங்களான ஸ்டார் மற்றும் ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் சரியாகப் போகவில்லை என்பதால் கவின் படங்களின் சந்தை மதிப்பு குறைந்துவிட்டது எனச்சொல்லி இணைய நிறுவனங்கள் அவ்வளவு விலை கொடுக்க முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதன்பின், தயாரிப்பு நிறுவனமே விலையைக் குறைத்துக் கேட்டிருக்கிறது.இப்போது அவர்கள் கேட்கும் தொகை சுமார் நான்கு கோடி என்று சொல்லப்படுகிறது.
இதனால் இப்படத்தை வாங்க இரண்டு நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.
அந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால் அறிவித்தபடி செப்டம்பர் 19 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும் அதில் தாமதம் ஏற்பட்டால் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகும் என்கிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.