மீண்டும் வருகிறது கமலின் ஆளவந்தான் – கலைப்புலிதாணு அதிரடி
கமல்ஹாசன், ரவீனாடண்டன், மனீஷாகொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான்.
கமல்ஹாசனே திரைக்கதை அமைத்திருந்த அந்தப்படம் வெளியாகும் நேரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான அந்தப்படம் அவ்வளவு எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி பெரும் தோல்வியைச் சந்தித்தது.
கலைப்புலிதாணு,அப்போதே சுமார் 11 கோடி நட்டத்தைச் சந்தித்தார் என்று சொல்லப்பட்டது. அதன்விளைவு சில ஆண்டுகள் அவரால் படத்தயாரிப்பில் இறங்கமுடியவில்லை.
அதோடு கமல்ஹாசன் மீது கடுமையாகக் குற்றம்சாட்டி அவரோடு இன்றுவரை பேசுவதில்லை.
அந்தப்படம் வெளியான நேரத்தில், இது இன்னும் பத்துவருடம் கழித்து வெளியாகவேண்டிய படம், கமல் மிகவும் முன்கூட்டியே சிந்தித்திருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
அப்போது அந்தப்படம் 178 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இருந்தது. அதாவது மூன்று மணிநேரப்படம்.
21 ஆண்டுகள் கழித்து இப்போது அந்தப்படத்தை மீண்டும் வெளியிடத் தயாராகியிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
இப்போது, ஒரு மணிநேரப்படத்தைக் குறைத்து இரண்டுமணி நேரம் ஓடுகிற வகையில் படத்தொகுப்பு செய்து வெளியிடவிருக்கிறார்களாம்.
நவீனதொழில்நுட்ப முறையில் மாற்றி வெளியிடவிருக்கிறார்கள்.
இப்போது இப்படம் கண்டிப்பாகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்று உறுதியாக நம்பி படத்தைப் பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறாராம் கலைப்புலிதாணு.
ஆனால் இவை எதுவும் கமல்ஹாசனுக்குத் தெரியாது அல்லது முறைப்படி சொல்லப்படவில்லை என்பதுதான் நெருடல் என்கிறார்கள்.











