கமல் 60 கொண்டாட்டம் – ரஜினி விஜய் அஜீத் பங்கேற்பு
நவம்பர் ஏழாம் தேதி நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள். அதோடு அவர் திரைத்துறைக்கு வந்து அறுபது ஆண்டுகள் ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் (1960) வெளியாகி 60 ஆண்டுகள் ஆகின்றன.
கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு சீனிவாசன் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
அடுத்த நாளான 8 ஆம் தேதி காலை 9.30-க்கு சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலக குருவான இயக்குநர் கே.பாலசந்தரின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் பாலசந்தர் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர்.
மூன்றாவது நாளான 9 ஆம் தேதி கமலின் 60 ஆண்டுகால கலைப் பயணத்தை கொண்டாடும் விதமாக இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது.
இந்நிகழ்ச்சி வானிலை உள்ளிட்ட சில காரணங்களால் நவம்பர் 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
நவம்பர் 17 அன்று சென்னை எஸ்.டி.ஏ.டி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலைவிழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், விஜய், அஜீத் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
திரையுலக முன்னோடி என்கிற அடிப்படையில் கமலைப் பெருமைப்படுத்த இவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.











