கமல் 233 – இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் இணைந்து இசையமைக்கிறார்கள்
விக்ரம் படத்தின் பெரிய வசூல் காரணமாக மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் கமல்.இதனால் படத்தில் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகள், படத்தைப் பாராட்டுபவர்களுடன் சந்திப்பு என உற்சாகமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இவற்றிற்கிடையே அடுத்த படத்துக்கான வேலைகளும் நடந்துகொண்டிருப்பதாகத் தகவல்.
கமலின் 233 ஆவது படமாக உருவாகவிருக்கும் அடுத்தபடத்தை மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கவிருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
விக்ரம் வெற்றி கொடுத்த தெம்பில் 233 ஆவது படத்தையும் விக்ரம் போல் மிகப்பெரிய படமாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறாராம் கமல்.
அதற்காக, விக்ரம் படத்தில் நடித்த விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் ஆகியோரை அடுத்த படத்திலும் நடிக்க வைக்க எண்ணி அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.
அதைத்தாண்டி இன்னொரு மிகப்பெரிய விசயத்தைச் செய்யவிருக்கிறாராம் கமல்.
அது என்னவென்றால்? கமலின் 233 ஆவது படத்துக்கு இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து இசையமைக்கவிருக்கிறார்கள் என்பதுதான்.
233 ஆவதுபடத்தின் கதை தேவர்மகன் 2 என்பதால் தேவர்மகனுக்கு இசையமைத்த இளையராஜாவோடு ஏ.ஆர்.ரகுமானையும் இணைத்தால் தமிழ்நாடு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரியபடமாக மாறிவிடும் என்பதால் அதற்கான பேச்சுவார்த்தைகளில் இறங்கியிருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
நடந்தால் நல்லதுதான்.











