சினிமா செய்திகள் நடிகர்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்பு கண்கலங்கியது ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் – சீஸன் 6’.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பிரபல பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். மா.கா.பா.ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகரும், இசையமைப்பாளருமான சிம்பு கலந்து கொண்டார்.

அவர் அரங்கத்துக்குள் நுழைந்தபோது போட்டியாளர்கள், பார்வையாளர்கள், நடுவர்கள் என எல்லாருமே எழுந்துநின்று கைதட்டினர். அதுவும் பார்வையாளர்களிடம் இருந்து எழுந்த கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது. இதனால் சிம்பு மனம் நெகிழ்ந்தார். உடனடியாகப் பார்வையாளர்கள் பகுதிக்குச் சென்று தன் ரசிகர்களுக்கு கைகொடுத்தார்.

மேலும், பாட்டுப் பாடியும் அசத்தியதோடு மட்டுமல்லாமல், டான்ஸ் ஆடியும் போட்டியாளர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார். போட்டியாளரான நாட்டுப்புறப் பாடகர் செந்திலுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடலையும் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெற்ற ‘காதலை, தேடிப்போக முடியாது. அதுவா நடக்கணும். நம்மளப் போட்டு தாக்கணும்’ என்ற டயலாக்கையும் அவர் பேசிக் காட்டினார்.

அங்கிருந்த ரசிகர்கள் ‘எஸ்.டி.ஆர். வாழ்க… எஸ்.டி.ஆர். வாழ்க…’ என்று தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். அன்பின் நெகிழ்ச்சியில் சிம்பு கண்கலங்கி அழுதேவிட்டார். “எப்போதுமே என்னைப் பத்தி நிறைய தப்பாவே கேட்டுட்டேன். திடீர்னு நல்லா சொல்றதை தாங்கிக்க முடியல” என்று கண்கலங்கிபடியே தெரிவித்தார்.

நடிகர்களுக்கு அவர்களுடைய திரைப்படங்களின் வெற்றிதான் அவர்களுடைய மதிப்பைத் தீர்மானிக்கும். வெற்றி தோல்விகளைத் தாண்டி ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் சிம்பு என்பதை இந்நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

Related Posts