கைதி படத்தின் கதைத்திருட்டு வழக்கு முடிந்தது – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படம் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி. அப்படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கைதி 2 படம் எடுக்கத் தடை விதித்துள்ளது.
2000 ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் 2007 ஆம் ஆண்டு தான் கூறியதாகவும் கதை பிடித்திருந்ததால், இக்கதையைப் படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை தன்னிடம் வழங்கியதாகவும் ராஜிவ் ரஞ்சன் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின் 2019 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் தமிழில் வெளியான கைதி படத்தை அண்மையில் ஊரடங்கில் பார்த்தபோது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், தான் சொன்ன கதையின் இரண்டாம் பகுதியை எடுத்துக்கொண்டு கைதி முழு படத்தையும் அவர்கள் உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜிவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு கைதி படத்தைப் பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்துள்ளது.
2021 ஜூலையில் இது நடந்தது.
அதன்பின், இன்று ட்ரீம்வாரியர் நிறுவனம் சார்பில் வெளீயிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்….
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டது.
இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கேரளாவில் தொடரப்பட்ட வழக்கில் படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கும், ‘கைதி 2’ எடுப்பதற்கும் தடை கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை இரத்து செய்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











