காலா படத்தால் திலீபனுக்கு நடந்த நன்மை
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான படம் வத்திக்குச்சி. இந்தப்படத்தில் அறிமுகமான நாயகன் திலீபன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்.
அஞ்சலியோடு இணைந்து நடித்த வத்திகுச்சி திரைப்பட நாயகன் திலீபனுக்கு அப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு பிறகு திலீபன் நாயகனாக நடிக்கத் தொடங்கிய படம் குத்தூசி.
லஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம்.தியாகு தயாரிக்க சீனுராமசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த சிவசக்தி குத்தூசி திரைப்படத்தை இயக்கிவருகிறாராம்.
இப்படத்தைப்பற்றி பேசிய திலீபன் வத்திக்குச்சி படத்திற்கு பிறகு நிறைய கதை கேட்டேன் என் மனதிற்கு பிடித்தது போல் அமைந்தது குத்தூசி திரைப்படம் தான் என்று கூறியிருந்தார்.
இப்படம் தொடங்கி ஓரிரு ஆண்டுகளாகிவிட்டன. சில காரணங்களால் வெளியீடு தாமதமாகிக் கொண்டிருந்ததாம்.
ஜூன் 7 இல் வெளியான காலா படம் குத்தூசியின் வெளியீட்டை வேகப்படுத்தியிருக்கிறது.
காலாவில் ரஜினியின் மகனாக திலீபன் நடித்திருந்தார்.அதில் அவருக்கு நல்லபெயர் கிடைத்தது. அதன்விளைவு இந்தப்படத்துக்கும் நல்லகாலம் பிறந்திருக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என்கிறார்கள்.
யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பார்கள். அதுபோல் காலா தோல்வி என்றாலும் அது குத்தூசியின் தடைகளை உடைத்திருக்கிறது என்கிறார்கள்.











