விஷால் சொன்ன விசயம் – படக்குழுவினர் மகிழ்ச்சி
விஷாலின் முப்பதாவது படத்தை அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்குகிறார்.இந்தப்படத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு தற்காலிகமாக எனிமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் நடந்துவருகிறது.
சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா பகுதியை அரங்கமாக அமைத்து அதில் படத்தின் தொடக்கப்பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது.கதைக்களம் சிங்கப்பூர் என்பதால் அந்நகரம் போல் அரங்குகள் அமைத்து அவற்றில் படப்பிடிப்பு நடந்துவருகிறதாம்.
அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு நவம்பர் மூன்றாம் தேதி நிறைவடையும் என்றார்கள்.
ஆனால் திட்டமிட்டபடி இல்லாமல் மேலும் சில நாட்கள் படப்பிடிப்பு நீண்டு இன்று நிறைவடைந்திருக்கிறது.
மேலும் சில நாட்கள் நீண்டதற்குக் காரணம் விஷால்தான் என்கிறார்கள்.
மொத்தப் படக்குழுவும் படப்பிடிப்புத்தளத்தில் காத்திருந்தும் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லையாம். இப்படி நான்கு நாட்கள் தொடர்ச்சியாக அவர் வராமல் போனதால்தான் திட்டமிட்டபடி முடிக்கமுடியாமல் நீண்டிருக்கிறது என்கிறார்கள்.
நான்கு நாட்களும் விடுதி அறையிலேயே அவர் இருந்தார் என்றும் விடுதி அறையில் அவர் இல்லை எங்கு போனாரென்றே தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் தயாரிப்புத் தரப்பும் படக்குழுவும் அதிருப்தி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லையாம்.
அதேசமயம், நான்கு நாட்கள் தன்னால் படப்பிடிப்பு தடைபட்டதை உணர்ந்த விஷால்,என்னால் உங்களுக்கு என்ன நட்டம் ஏற்பட்டதோ அதை நானே ஏற்றுக்கொள்கிறேன். இந்த நான்கு நாட்கள் செலவை என் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள் என்று படக்குழுவினரிடம் சொல்லியிருக்கிறாராம்.
அவர் சொன்னபடி சம்பளத்தைப் பிடிக்க முடியுமா? என்பது சந்தேகம் என்றாலும் தன்னால் நட்டமேற்பட்டிருக்கிறது என்பதை விஷால் உணர்ந்ததே பெரிது என்று மகிழ்கிறார்கள் படக்குழுவினர்.











