சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாசின் அட்டகாச திட்டம் – நடக்குமா?

2020 சனவரியில் வெளியான ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதன்பின்,விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார்.

அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவது என்று முடிவெடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்கவிருப்பது ஒரு குரங்கு. அதை வைத்துக் கொண்டு சுவாரசியமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதோடு இதற்கான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை அலசி ஆராய்ந்து ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து வேலைகளையும் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் அதுகுறித்த எவ்வித அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

அதற்குக் காரணம் இருக்கிறதாம்.

என்ன?

தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் யாரும் இல்லை, எனவே, தெலுங்கு அல்லது இந்தியில் யாராவதொரு பெரிய நடிகரைப் பிடித்து ஒரு படம் ஒப்பந்தம் செய்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயல்கிறாராம்.

அப்படி யாரையாவது பிடித்துவிட்டாலும் உடனே படப
பிடிப்புக்கு வர அவர்கள் தயாராக இருக்கமாட்டார்கள். ஆறு மாதம் கழித்து அந்தப்படம் தொடங்கும் என்பதை முதலில் உறுதி செய்துகொண்டு அதன்பின், அந்த இடைவெளியில் இந்த அனிமேசன் படத்தை முடிக்கிறேன் என்று சொல்லக் காத்திருக்கிறாராம்.

எதற்காக இவ்வளவு திட்டமிடல்? என்றால், நேரடியாக அனிமேசன் படத்தைத் தொடங்கினால், முருகதாஸ் கதை முடிந்தது, இனிமேல் அவரை நம்பி எந்தக் கதாநாயகனும் வரமாட்டார், அதனால்தான் அனிமேசன் படத்துக்குப் போய்விட்டார் என்று சொல்லிவிடுவார்களாம்.

அதனால் கைவசம் ஒரு பெரிய கதாநாயகனை வைத்துக்கொண்டு அதன்பின் இந்தப்படத்தை அறிவித்தால் கெத்தாக இருக்கும் என்று நினைக்கிறாராம்.

ஆனால் தற்போதுவரை அவருக்கு எந்தப் பெரிய கதாநாயகனும் கிடைக்கவில்லையாம். அதற்காக மனம் தளராமல் அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts