சினிமா செய்திகள்

இந்தியன் 2 பட சிக்கல் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம், 1996 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்தின் 2 ஆம் பாக, இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. கம்ல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். இதனால் படப்பிடிப்பு பல நாட்கள் தடைபட்டது. இதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் இறங்கியதாலும், கொரோனா பரவல் காரணமாகவும் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்குவதற்கும், அந்நியன் படத்தின் இந்தி மொழிமாற்றை இயக்குவதற்கும் ஒப்புக்கொண்டார். இதனால் இந்தியன் -2 திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இந்தியன்-2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் பிற படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

படத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட அதிக அளவில் செலவு செய்திருப்பதாகவும், கடந்த மார்ச் மாதம் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

இதற்கு இயக்குநர் ஷங்கர் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், இந்தப் படத்தை தில்ராஜ் என்பவர் தயாரிக்க இருந்ததாகவும், அவரைச் சமாதானப்படுத்தி இந்தப் படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்ததாகவும் ஷங்கர் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியன்-2 படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்யப்பட்டதாகவும், படத்தைத் தயாரிக்க 270 கோடி ரூபாய் பட்ஜெட் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதனைக் குறைக்க லைக்கா நிறுவனம் கேட்டுக்கொண்டதால் 250 கோடியாக பட்ஜெட்டை குறைத்ததாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக படப்பிடிப்பை தொடங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாக லைகா நிறுவனத்தின் மீது இயக்குநர் ஷங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் படத்தை முதலில் திட்டமிட்டபடி தில்ராஜ் தயாரித்திருந்தால், படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் என்றும் அரங்கம் அமைப்பது, நிதி ஒதுக்கீடு செய்வது, ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் தாமதம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு தாமதமானதாக இயக்குநர் ஷங்கர் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்கத் தயாராக இருந்ததாகவும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ஷங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பினரும் கலந்து பேசி தீர்வு காணுமாறு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியன்-2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Related Posts