4 நொடியில் ஷங்கர் 2 அடியில் கமல் காஜல் – இந்தியன் 2 விபத்தில் தப்பியது எப்படி?
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 19) இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாகப் பலரும் தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், இது தொடர்பாக பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது என்று கூறாமல், ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் தானும் நூலிழையில் தப்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல் பேசும்போது,
சிறுவயதிலிருந்து இந்தத் தொழிலில்தான் இருக்கிறேன். ஆனால், இந்தத் தொழிலில் பாதுகாப்பு இல்லை என்பதற்கான இன்னொரு அசம்பாவிதம் இங்கு நடந்துள்ளது. இன்று காலையில் கூட நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். இதுபோன்ற இன்னொரு நிகழ்வு நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அது அனைத்தையும் திரைத்துறை செய்ய வேண்டும்.
100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் என மார்தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கான ஒரு பாதுகாப்பை அளிக்க முடியாத ஒரு துறையாக இருப்பது அவனமாத்துக்குரியது. தனிப்பட்ட நபராக எனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. என்னால் முடிந்தது இந்தக் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் ஒரு கோடி ரூபாயை அறிவிக்கிறேன்.
இது இறந்த உயிருக்கான இழப்பீடு அல்ல. அவர்கள் சிலர் ரொம்பவே ஏழை மக்கள். 3 ஆண்டுகளுக்கு முன்பு கூட நானும் விபத்தில் சிக்கினேன். அதிலிருந்து மீண்டு வருவது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். என்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் கிருஷ்ணா. இரண்டு நாட்களுக்கு முன்புதான் என்னிடம் இங்கு வேலைக்குச் சேர்ந்துள்ளேன் என்று பெருமையுடன் சொன்னார். இன்று அவர் உயிருடன் இல்லை. மதுசூதனராவ், சந்திரன் ஆகியோரும் இன்று இல்லை. நான் அறிவித்த இந்தத் தொகை சேதத்துக்கான பரிகாரமாக ஆகவே முடியாது.
அவர்களுடைய குடும்பம் பாதுகாப்புக்காகவும், அடிபட்டவர்களின் குடும்பம் வேலையில்லாத நேரத்தில் கரை சேர்வதற்கும் ஒரு முதலுதவியாக நினைக்க வேண்டும். இது சிகிச்சைக்காக என எடுத்துக் கொள்ளக் கூடாது. சிகிச்சை என்பது இனி நடக்கப் போகும் படப்பிடிப்புகளில் கடைநிலை ஊழியனுக்குக் கூட பாதுகாப்பு இருக்க வேண்டும். அதற்கான இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். அதற்கு முழுத்துறையும் பங்கு கொள்ள வேண்டும். இதை வேண்டுகோளாக யாரும் நினைத்துவிட வேண்டாம். இது நம் கடமை. இந்தியாவில் எந்தவொரு துறையிலும் பாதுகாப்பு என்பது கிடையாது. சினிமா என்பது பிரபலமாக இருப்பதால் ஊடகத்தில் கவனம் பெறுகிறது.
விபத்துக்கு ஏழை, பணக்காரன் தெரியாது. அது ஒரு சுனாமி மாதிரி. இந்த அறைக்குள் நானும் இன்று இருந்திருக்கக் கூடும். அவ்வளவு நூலிழையில் உயிர் தப்பிய கதைதான் நடந்தது. 4 நொடிகளுக்கு முன்பு இயக்குநர் தள்ளிப் போய்விட்டார். ஒளிப்பதிவாளரும் தள்ளிப் போய்விட்டார்.
எந்த கூடாரம் நசுங்கியதோ, அதற்குள் நானும் நாயகியும் இருந்தோம். 2 அடி வேறொரு பக்கம் இருந்திருந்தால், எனக்குப் பதில் வேறொருவர் இங்கு பேசிக் கொண்டிருப்பார். ஆகவே, விபத்துக்கு ஏழை, பணக்காரன் தெரியாது. பயந்துபோய் இதைச் சொல்லவில்லை. இது நடக்க, நடக்க அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கிறேன்”
இவ்வாறு கமல் கூறினார்.











