சினிமா செய்திகள்

கவின் இரசிகர்களுக்கோர் நற்செய்தி

லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்கள் தொடர்ந்து வெற்றி என்றதும் அப்படங்களின் நாயகனுக்குப் பெரும் வரவேற்பு.அதன்பின் அவர் படங்கள் வெளியாகும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

டாடா படத்துக்கு அடுத்து வெளியான ஸ்டார் படம் நன்றாகப் போனது.ஆனால் அதற்கடுத்து வெளியான ப்ளடி பெக்கர் மற்றும் அண்மையில் வெளியான கிஸ் ஆகிய படங்கள் சரியாகப் போகவில்லை.

இதனால், கவினும் அவருடைய இரசிகர்களும் சோர்வடைந்திருக்கின்றனர்.

அவர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தியொன்று உலவிக் கொண்டிருக்கிறது.

அது என்ன?

கிஸ் படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார்.

கவின் நாயகனாக நடிக்கும் மாஸ்க் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

மாஸ்க் படத்தின் பணிகள் பூஜையுடன் 2024 மே மாதம் 17 ஆம் தொடங்கியது.அம்மாத இறுதியிலேயே அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.

அதன்பின் விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பரிலேயே முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டது.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த பிறகு, தயாரிப்பாளர் என்கிற முறையில் படத்தைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.அவர் பார்த்துவிட்டு படத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அதற்காக மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.அதோடு எந்தெந்த மாதிரியான காட்சிகள் எடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.அதோடு அவரே படப்பிடிப்பில் கலந்து கொண்டு வழிகாட்டியிருக்கிறார்.

இன்னும் ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.தேவைப்பட்டால் அதை எடுப்பார்கள் இல்லையெனில் தவிர்க்கவும் வாய்ப்பிருக்கிறதாம்.

இந்நிலையில்,இப்படத்தை சீக்கிரம் வெளியிட்டுவிட வேண்டும் என்கிற முனைப்பில் படக்குழு இருக்கிறதாம்.அதற்காக இப்படத்தின் முன்னோட்டம் அதாவது டிரெய்லர் தயார் செய்யப்பட்டிருக்கிறதாம்.

அதை அப்படக்குழுவினர் மட்டும் பார்த்திருக்கிறார்கள். நெருங்கிய வட்டங்களில் காட்டியிருக்கிறார்கள். பார்த்தோர் அனைவருக்குமே அந்த முன்னோட்டம் மிகப்பிடித்திருக்கிறதாம்.

டிரெய்லர் சுவாரசியமாக இருக்கிறது, இப்படம் நிச்சய்ம் பெரிய வெற்றி பெறும் என்றெல்லாம் சொல்கிறார்களாம்.இதனால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு விரைவில் அதை வெளியிட முடிவு செய்திருக்கிறதாம்.

அது வெளியானால் கவின் இரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

Related Posts