விமர்சனம்

குலு குலு – திரைப்பட விமர்சனம்

அமேசான் மழைக்காட்டில் பிறந்து பலமொழிகளைக் கற்று பல்வேறு நாடுகளைக் கடந்து சென்னை வந்து வசிக்கிறார் சந்தானம். கூகுள் என்று பெயர், குல்லுபாய் என்றழைக்கிறார்கள். கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் அவருக்கு உதவி என்று யாராவது கேட்டால் உடனே ஓடிப்போய் செய்யும் பழக்கம்.அதனால் பல சிக்கல்களைச் சந்திக்கிறார்.

தங்கள் நண்பனை ஒரு கூட்டம் கடத்திவிட்டது மீட்டுக் கொடுங்கள் என்று சிலர் அவரை அணுகுகிறார்கள். சந்தானமும் கடத்தப்பட்டவரை மீட்கப் புறப்படுகிறார். 

அதன்பின் என்னவாகிறது? என்பதை இருண்மை கலந்த நகைச்சுவையுடன் சொல்லிச் செல்லும் படம்தான் குலுகுலு.

அழுக்கான உடை, அமைதியான முகம், அதீத புத்திசாலித்தனம் என சந்தானம் இதுவரை ஏற்காத வேடம். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பேச்சு பேசாத இந்த சந்தானமும் ஈர்க்கிறார். எவ்வித வேடத்துக்கும் நான் தயார் என்பதை இந்தப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.

கடத்தப்பட்டவரின் நண்பராக வருகிறார் நமீதாகிருஷ்ணமூர்த்தி.ஆண்களை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தினால் போரடிக்கும் என அவரையும் கோர்த்துவிட்டிருக்கிறார் இயக்குநர். 

இன்னொரு நாயகி அதுல்யாசந்திரா. மடில்டா எனும் வெளிநாட்டுப் பெண்ணாக வருகிறார். பல்லாயிரம்கோடி சொத்துகள் உள்ள குடும்பங்களில் உள்ள சிக்கல்களை அம்பலப்படுத்தும் வேடம் அவருக்கு. நன்றாகச் செய்திருக்கிறார்.

பிரதீப்ராவத்,பிபின், தீனா உள்ளிட்டோருக்கு வில்லன் வேடம். வழக்கமான தமிழ்த்திரைப்பட வில்லன்கள் போல் படம் நெடுக துள்ளிக்  கொண்டேயிருக்கிறார்கள்.

ஜார்ஜ்மரியம் டிஎஸ்ஆர் உள்ளிட்ட கடத்தல் கூட்டத்தை ஈழத்தமிழர்களாகக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விஜய்கார்த்திக் கண்ணன் இயக்குநரின் இருண்மை எண்ணத்துக்கேற்ப ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சந்தோஷ்நாராயணன் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். திடீரென பாடல்கள் வந்து திடுக்கிட வைக்கின்றன.

உலகில் சுமார் 700 பேர் மட்டும் பேசும் மொழிக்குச் சொந்தக்காரன், நாடிழந்தவன் என மிக ஆழமான கதாபாத்திரத்தைச் சந்தானத்துக்குக் கொடுத்து அதன்மூலம் பல வலிகளைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.

ஈழத்தமிழர்களைக் கடத்தல்காரர்களாகக் காட்டிக் கொச்சைப்படுத்தியிருக்கிறாரே என்று நினைக்க வைத்து இறுதியில் அவர்களை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

பப்ஜி போன்ற இணைய விளையாட்டுகளின் ஆபத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.

காதல், பாசம், உறவுகள் ஆகிய அனைத்தையும் மறுவாசிப்பு செய்கிறார். சொல்ல வந்ததை இலகுவான நடையில் சொல்லியிருந்தால்  எல்லோரும் இரசிக்கும்படி இருந்திருக்கும்.

வித்தியாசமான முயற்சி. சந்தானத்துக்குப் பலம்

Related Posts