February 2, 2026
விமர்சனம்

காந்தி டாக்ஸ் – திரைப்பட விமர்சனம்

1987 ஆம் ஆண்டு கமல்,அமலா,பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் பேசும் படம்.அப்படத்தின் சிறப்பு அது பேசாத படம் என்பதுதான்.ஆம்,அப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் வசனம் பேசாது.

சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் 79 ஆம் நினைவுநாளில் காந்தி பேசுகிறார் எனும் பொருளில் காந்தி டாக்ஸ் எனும் படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் சிறப்பும் இது பேசாத படம் என்பதுதான்.

மும்பையில் நடக்கும் கதை. வறுமையில் வாடும் விஜய்சேதுபதியும் பெரும் தொழிலதிபர் அரவிந்த்சாமியும் கதைமாந்தர்கள். காந்தி சிரித்துக் கொண்டிருக்கும் பணத்தாள் இவர்களை ஒரு புள்ளியில் இணைக்கிறது. அது என்ன? என்பதை சுவைபடச் சொல்லியிருக்கிறது படம்.

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்து வரவேற்புப் பெறும் விஜய்சேதுபதி, இந்தப் படத்தில் பேசாமலே நடிக்க வேண்டும் என்கிற சவாலை ஏற்றுக் கொண்டு திறம்படச் செய்திருக்கிறார்.தாய்ப்பாசம், கனிந்த காதல், கழிவிறக்கமற்ற வறுமையின் கொடுமை ஆகியனவற்றை கண்களாலும் உடல்மொழியாலும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் சிலிர்ப்பு.

உள்ளுக்குள் ஒரு பெரும் எரிமலையை வைத்துக் கொண்டு வெளியில் புன்சிரிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள வேடம் அரவிந்த்சாமிக்கு.அதை செவ்வனே செய்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அதிதிராவின் அழகுக்கு அழகு சேர்த்திருக்கின்றன அவரது பாவனைகள்.அவர் பேசும் காதல் மொழி இனிமை.

சித்தார்த் ஜாவ் கதாபாத்திரம்,பேசாமல் சிரிக்க வைத்து படத்தை இலகுவாக்குகிறது.

ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத்துக்கு பளபளப்பும் மினுமினுப்பும் கூடிய செல்வச்செழிப்பில் புரளும் மும்பையையும் ஒரு வேளை உணவுக்கே போராடும் வறுமை சூழ் மும்பையையும் ஒரு சேரக் காட்சிப்படுத்தும் அரிய வாய்ப்பு.அதைப் பொறுப்பாகச் செய்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

வசனங்கள் இல்லை என்று நினைக்க முடியாத வண்ணம் இசையால் பேசியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.கதாபாத்திரங்கள் சொல்ல நினைப்பதை இசையாய் மொழிபெயர்த்து வியக்க வைத்திருக்கிறார். படம் நெடுக அவர் ஆதிக்கம்.அனைவரையும் பாதிக்கும்.

கிஷோர் பாண்டுரங் பலேகர் எழுதி இயக்கியிருக்கிறார். திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்கிற புரிதல் சிறிதுமின்றி கத்தித் தீர்த்துக் கொண்டிருக்கும் படங்கள் மத்தியில் காட்சிகளினூடே நாட்டின் அவலங்களைப் பற்றி அனைவரையும் பேசவைத்திருக்கிறார்.

– கதிர்

Related Posts