ஆகாஷ் முரளி அதிதி ஷங்கர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது எப்படி? – விஷ்ணுவர்தன் விடை
அறிந்தும் அறியாமலும், பட்டியல், அஜித்துடன் பில்லா,ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தியில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
அதன்பின் இப்போது, மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மருமகன் இயக்குநர் சினேகாவின் கணவர் எனப் பல பெரிய அடையாளங்களைக் கொண்ட ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
இப்படம் குறித்து ஆகாஷ் முரளியின் மனைவியும்,இப்படத்தின் இணைதயாரிப்பாளருமான இயக்குநர் சினேகா பிரிட்டோ கூறுகையில்…
நடிப்பு என்பது ஆகாஷின் நீண்ட நாள் கனவு.அது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்.அதற்காக அவர் நடிப்புப் பயிற்சி சண்டைப்பயிற்சி நடனப் பயிற்சி ஆகியனவற்றை செய்து தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார். வேறு ஒரு நிறுவனத்திற்காக அவர் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், அவரை பிடித்துப் போனதால் என் அப்பா நம்ம நிறுவனத்திலேயே பண்ணலாம் என்று சொல்லி ஆரம்பித்தோம். நான் ஆகாஷை வைத்து படம் இயக்குவது எதிர்காலத்தில் நடக்கலாம் என்றார்.
இப்படத்தின் நாயகன் ஆகாஷ் முரளி படம் பற்றிக் கூறியதாவது….
நான் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். கொரோனா சிக்கல் வந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு திருமணம் நடந்தது.இதனால் தான் நடிப்பதற்கு சற்று காலதாமதம் ஆனாது. விஷ்ணு சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை தான். ‘அறிந்தும் அறியாமலும்’ படம் போன்ற ஒரு படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால், என்னை வைத்து விஷ்ணு சார் படம் பண்ணுவாரா? என்பது கேள்விக்குறியாக இருந்தது, எனக்கும் அது தெரியும். இருந்தாலும் அவரை ஒரு முறை சந்தித்து சாதாரணமாகப் பேச வேண்டும் என்று முயற்சித்தேன். அப்படித்தான் அவரைச் சந்தித்தேன், அப்போது என் ஆசையை அவரிடம் சொன்னேன்.அப்படித் தொடங்கிய நட்பு ஆரம்பித்து நேசிப்பாயா படமாக மாறியுள்ளது என்றார்.
இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் படம் குறித்து ஓர் உரையாடல்….
1.நேசிப்பாயா எப்படித் தொடங்கியது?
நான் இந்தியில் இயக்கிய ஷெர்ஷா படத்தின் டப்பிங் பணிகளில் இருந்த போது ஆகாஷ் என்னை மும்பையில் சந்தித்தார். நட்பு ரீதியாகத்தான் என்னை அவர் சந்தித்தார்.அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அடிக்கடி அவரைச் சந்தித்தேன்.அவரை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது.ஒரு கட்டத்தில் இவருக்காக ஒரு படம் பண்ணலாமே என்று எனக்கே தோன்றியது. அப்படித் தான் நேசிப்பாயா படம் தொடங்கியது.
2.படம் குறித்து..?
இது முழுக்க முழுக்க காதல் கதை.அதோடு, இரசிகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரு திரைக்கதையோடு நல்ல ட்ராமாவாக இருக்கும்.இப்போதைய காலக்கட்டத்தில் இரசிகர்களை திருப்தி செய்யவில்லை என்றால் எழுந்து போய்க்கொண்டே இருப்பார்கள். அதனால், காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்டு, இளைஞர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி திரைப்பட இரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் விறுவிறுப்பான படத்தை எடுத்திருக்கிறேன்.
3.இந்தக் கதைக்குள் ஆகாஷ் வந்தது குறித்து..?
இந்தக் கதை ஆகாஷ் முரளிக்காக எழுதப்படவில்லை. இப்படி ஒரு கரு என்னிடம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் இதைப் படமாக எடுக்கலாம் என்று இருந்தேன், ஆகாஷுக்காக படம் பண்ண முடிவான போது, ஏன் இந்தக் கதையைப் பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதனால் தான் இந்தக் கதையைத் தேர்வு செய்தேன்.இதற்கு ஆகாஷ் முரளி மிகச் சரியாக இருந்தார்.ஆறடி உயரம், கணீர் குரல் என்று அவரைப் பார்க்கும் போது மிக அழகாக இருப்பார், அதுவே ஒரு நடிகருக்கான முதல் தகுதி. அவருடன் பழகப் பழக அவர் குழந்தை போன்றவர் என்று தெரிந்தது.அது இந்தக் கதைக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது.
4.படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகையர் பற்றி..?
கதாநாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர். சினிமாத்தனம் இல்லாத ஒரு பெண். அதனால் தான் அவரை நாயகியாகத் தேர்வு செய்தேன்.ஒப்பனை இல்லாமலும் மிகவும் அழகாக இருப்பார், அவருடைய உடல்மொழி, நடிப்பு என அனைத்தும் ஒரு நடிகையாக அல்லாமல் எளிமையான பெண் போல் இருக்கும்.அது படத்திற்கு நன்றாக இருக்கும் என்பதால் அவரை நாயகியாக நடிக்கவைத்தோம்.
படத்தில்,கல்கி கொச்சலின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை எழுதும் போதே அவரை மனதில் வைத்து தான் எழுதினேன். சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
5.தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களே?
நேசிப்பாயா கதை தமிழ்நாட்டில் தொடங்கினாலும், 90 விழுக்காடு கதை போர்ச்சுக்கல் நாட்டில் தான் நடக்கிறது. கதைப்படி மொழி தெரியாத ஒரு நாடு தேவை. போர்ச்சுக்கல் நாட்டை இதுவரை யாரும் திரைப்படங்களில் பெரிய அளவில் காட்டவில்லை. அதே சமயம் எங்கள் கதைக்கும் அந்த நாடு சரியாக இருந்ததால் அந்த நாட்டைத் தேர்வு செய்தோம்.அங்கு படப்பிடிப்பு என்பதால் ஒளிப்பதிவாளர், சண்டைப்பயிற்சி இயக்குநர் ஆகியோரது தேதிகள் எனக்கு மொத்தமாக தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஓம்பிரகாஷ் தான் ஒளிப்பதிவு செய்தார். ஆனால் அவரது தேதிகள் மொத்தமாக கிடைக்காத சூழல் அமைந்ததால், பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரான கேமரோன் பிரைசன், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா ஆகியோரரை ஒப்பந்தம் செய்தோம்.அவர்கள் பக்கத்தில் இருந்ததாலும், நான் எதிர்பார்த்தது போல் அவர்களுடைய தேதி மொத்தமாக கிடைத்ததாலும் தான் அவர்களை ஒப்பந்தம் செய்தோம். அவர்களுடைய பணிகள் கவனிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
6.அஜீத்துடன் மீண்டும் இணைவீர்களா?
ஆரம்பம் படத்துக்குப் பிறகு, அஜித் சாருடன் இரண்டு முறை படம் பண்ணுவதாக இருந்தது.அது நடக்காமல் போய்விட்டது.இனி வரும் காலங்களில் அதுபோல் வாய்ப்பு அமைந்தால் இணைவோம்.
– இளையவன்










