செய்திக் குறிப்புகள்

டி 55 பட நிகழ்வில் வெற்றிமாறன் மாலையுடன் நிற்பது ஏன்?

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.அப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பு வெளியான இன்றே தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அப்படம் குறித்த செய்திக்குறிப்பு…

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : டி55
தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்குகிறார்.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. ஜி.என்.அன்புசெழியன் வழங்கும் டி 55 திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்.

தனது “ராயன்” திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் டி55 இல் களமிறங்குகிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,  திரைக்கதை, இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான “அமரன்” படம் அனைவரது பாராட்டுகளைக் குவித்து, பெரு வெற்றி பெற்றுள்ளது.

அதே போல டி55 படத்திலும்  தனது தனித்துவமான கதை மூலம், இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.
 
டி55 படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில்..,

தனுஷ் சார் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அற்புதமான திறமைமிக்க, இந்த இருவரின் கூட்டணியில், இப்படம் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும் என்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்திக்குறிப்போடு வெளியான புகைப்படத்தில் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புச்செழியன்,அன்புச்செழியன்,தனுஷ்,ராஜ்குமார் பெரியசாமி,வெற்றிமாறன் மற்றும் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் ஆகியோர் மாலை அணிந்தபடி நிற்கின்றனர்.

புகைப்படம் வெளியானதும்,இந்தப் படத்தில் வெற்றிமாறன் மாலையுடன் நிற்பது ஏன்? இந்தப் படத்தில் அவருடைய பங்கு என்ன? என்கிற கேள்விகள் அனைவருக்கும் எழும்.

அதற்கான விடை…

தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் ஓர் இடைவெளி ஏற்பட்டுவிட்டது.அதனால் அவர்கள் இனிமேல் இணைந்து பணியாற்ற மாட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின.ஆனால் உண்மையில் இருவரும் நட்போடுதான் இருக்கிறார்கள் என்பதை இப்புகைப்படம் மெய்ப்பிக்கிறது என்று சொல்கிறார்கள்.

இந்த எளிமையான தொடக்கவிழாவுக்கு நட்பின் அடிப்படையில் தான் வெற்றிமாறன் வந்தார்.குழு புகைப்படம் எடுக்கும்போது மரியாதை நிமித்தமாக அவரையும் புகைப்படத்தில் நிற்க வைத்தார்கள்.அவ்வளவுதான் என்று டி 55 படக்குழுவினர் சொல்கிறார்கள்.

Related Posts