கவுதம்கார்த்திக்கா? யோகிபாபுவா? இயக்குநர் முத்தையா தடுமாற்றம்
காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் தோல்வி காரணமாக இயக்குநர் முத்தையாவுக்கு அடுத்த படம் அமைவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
அந்தப்படத்துக்கு அடுத்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. அப்படத்துக்கு அருண்விஜய் மற்றும் இயக்குநர் முத்தையா ஆகியோர் கேட்ட சம்பளம் காரணமாக அது நடக்கவில்லை.
அதன்பின், ஏற்கெனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புலிக்குத்திபாண்டி என்றொரு படத்தை எடுத்திருப்பதால் மீண்டும் சன் பிக்சர்ஸுக்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அங்குபோய், விக்ரம்பிரபு மற்றும் கவுதம்கார்த்திக் ஆகிய இருவரை வைத்து அவர் எழுதியிருந்த கதையைச் சொல்லியிருக்கிறார்.அந்தக்கதையில் நகைச்சுவைக்காக யோகிபாபு வேடமும் இருந்திருக்கிறது.
அக்கதையைக் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார், யோகிபாபு கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது, அதை விரிவுபடுத்தி எழுதுங்கள். விக்ரம்பிரபு மற்றும் யோகிபாபுவை முன்னிலைப்படுத்தி படத்தை எடுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது, கவுதம்கார்த்திக்கை விட்டுவிட்டு யோகிபாபுவை முன்னிலைப்படுத்தி கதை எழுதுவதா? அல்லது இந்தப்படமே வேண்டாமென விட்டுவிடுவதா? என்கிற யோசனையில் இருக்கிறாராம் முத்தையா.
அதற்குக் காரணம், ஏற்கெனவே கார்த்தியின் விருமன் படத்துக்கு அடுத்து அவரைவிடச் சந்தைமதிப்பு குறைந்த ஆர்யா படம் செய்து அதுவும் தோல்வி என்பதால் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இரண்டுநாயகர்களில் ஒருவராக யோகிபாபுவை முன்னிறுத்தினால் நம்முடைய சந்தைமதிப்பு மேலும் குறைந்துவிடுமோ? என்கிற அச்சம்தான் காரணம் என்கிறார்கள்.
அதேசமயம், கதாநாயகன் யார் என்பது முக்கியமில்லை, படம் வெற்றி என்றால் இய்ல்பாகவே சந்தைமதிப்பு உயர்ந்துவிடும்.எனவே இந்தப்படத்தைச் செய்யலாம் என்கிற ஆலோசனையும் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறதாம்.
இவை தொடர்பான பேச்சுகள் தொடர்கின்றன. என்ன முடிவெடுக்கப் போகிறார்கள்? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.











