November 5, 2025
சினிமா செய்திகள்

மணலைக் குவித்து விசிலடித்து டெண்ட் கொட்டாயில் படம் – கேரளாவில் ஆச்சரிய அனுபவம்

கேரளமாநிலம், ஆலப்புழா மாவட்டம் செங்கனூரின் சட்டமன்ற உறுப்பினர் சஜி செரியான் முயற்சியில், கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (கே. எஸ். எஃப். டி. சி), திரைப்பட அகாடமி மற்றும் கலாச்சாரத் துறையின் உதவியுடன் நடந்துள்ள ஒரு செயல் திரைப்பட இரசிகர்களைப் பரவசப்படுத்தி வருகிறது.

நீங்கள் நாற்பது வயதைத் தாண்டியவராக இருந்தால் டெண்ட் கொட்டாய், டூரிங் டாக்கீஸ் என்கிற பெயர்களில் அழைக்கப்பட்ட திரையரங்குகளில் மணலைக் கூட்டிக் குவித்து உயரமாக்கிப் படம் பார்த்த அனுபவத்தைக் கொண்டிருப்பீர்கள்.

இப்போது முற்றாக அழிந்துவிட்ட இந்தத் தலைமுறை முற்றிலும் அறியாத அந்த அனுபவத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள்.

அங்கு, ஓலை மேய்ந்த 40 ஆண்டுகளாக பிரபலமாக இருந்த சந்தோஷ் டாக்கீஸ் என்ற திரைக் கொட்டகை மீண்டும் உருவாகியுள்ளது.

செப்டெம்பர் 25 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 வரை அந்த அரங்கில் பல பழைய மலையாளத் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் திரைப்படம் தொடங்கிய காலத்திலிருந்து பயன்படுத்தப்படும் கேமராக்கள், விளக்குகள் மற்றும் பிலிம் நெகட்டிவ்கள், சினிமா வரலாற்றை விவரிக்கும் – இது வரை யாரும் காணா புகைப்படங்கள், பழைய திரைப்படங்கள், கண்காட்சிக்காக சுவரொட்டிகள் என்று பல வித்தியாசமான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அதன் எதிரே பழையது போலவே, தென்னை ஓலையால் கட்டப்பட்ட தட்டுக்கடையில் ஒரு புது விதமான புழுக்கு (4 வகை கிழங்குகள் – கப்பா, சேப்பங்கிழங்கு , சேனை , காவுத்துக்கிழங்கு ஒன்றாக வேக வைத்த கலவை) மற்றும் மீன்பீரா 90 ரூபாய்க்கு , சாயா, சர்பத்து , பப்படுபோட்டி வெறும் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஓலைக் கொட்டகையின் வலது பக்கம் திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்ட பேனருடன் 2 மாட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இடது பக்கத்தில் பழைய படப்பெட்டிகளின் அடுக்கையும் காணலாம்.

அவற்றுள். ஓலமும் தீரமும், நிர்மால்யம், படையோட்டம், பார்கவி நிலையம், நீலக்குயில், மை டியர் குட்டிச்சாத்தான் போன்ற மலையாளிகள் மறக்க முடியாத திரைப்படங்கள் அவற்றுடன் 2 பிலிம் பெட்டிகளும் சைக்கிளில் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் பழைய திரைப்பட புரொஜெக்டரின் டெமோ அமைக்கப்பட்டுள்ளது.

இங்கே திரைப்படம் பார்க்க கட்டணம் ஏதுமில்லை. ஆனாலும் டிக்கெட் கட்டாயம் வழங்கப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்று தனித்தனி டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு சிவப்பு நிற டிக்கெட்டும், ஆண்களுக்கு மஞ்சள் நிற டிக்கெட்டும் வழங்கப்பட்டது .

டிக்கெட் வழங்கப்படும் முன், குழாய் ஒலிபெருக்கியில் பழைய மலையாளப் பாடல்களைக் கேட்டு மகிழலாம். சினிமா பூத்துக்கு மேலே கருப்பு பலகையில் வெள்ளை எழுத்துக்களில் ‘சந்தோஷ் டாக்கீஸ் – முண்டன்காவு ’ என்று பெரிதாக எழுதப்பட்டுள்ளது.

உள்ளே ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு இரும்பு நாற்காலியில், செகண்ட் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு பெஞ்சு மற்றும் தரையில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்.

மின்விசிறி மற்றும் ஏர் கூலர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வெளியில் ஓலை மேய்ந்த சீராக மூடப்பட்டிருந்த சிறுநீர் கழிப்பிடமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தென்னங்கீற்றுக் கொட்டகையில் படம் பார்க்கச் சென்றபோது, ​​35 வருடங்களுக்குப் பிறகு சிறுவயதிற்கு பின்னோக்கிப் பயணித்ததுப்போல் ஓர் உணர்வு ஏற்பட்டதெனப் பலரும் சொல்கிறார்கள்.

Dinesh

Dinesh

அங்குபோய்ப் படம் பார்த்த தினேஷ் கூறியதாவது…….

இப்படி ஒரு பழைய கீற்றுக் கொட்டகையில் போய்ப் படம் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கு இந்த நற்செய்தி புலனம் வாயிலாகக் கிடைத்தது.

அந்த மலரும் நினைவுகளை மெய்ப்பிப்பதற்காக, எனது கிராமமான கன்னிமாரியில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள முண்டன் காவுக்கு, என் அன்பு நண்பர் அமலோடு சேர்ந்து பைக்கில் பயணம். முண்டன் காவில் உள்ள சந்தோஷ் டாக்கீஸ் வந்தடைந்து டிக்கெட் வாங்கி, இரும்பு நாற்காலியில், பெஞ்சில், தரையில் என்று அமர்ந்து 3 காட்சியில் 3 திரைப்படங்களைக் கண்டு களித்தேன்.இந்தப் படங்களையெல்லாம் இதற்கு முன் பார்த்திருந்தாலும், அந்த தென்னங்கீற்றுக் கொட்டகையின் சூழலில் குழந்தைகளுடன் கூடி தரையில் அமர்ந்து படம் பார்த்த அனுபவத்துக்கு ஈடுயிணையில்லை .

மாலையில் அக்கம் பக்கத்து இடங்களிலிருந்தும் பெண்களும் குழந்தைகளும் பெரும் திரளாக வந்திருந்தனர். திருவிழாக் கூட்டமாகக் காட்சியளித்தது. பழைய திரையரங்குகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள ஏராளமான இளைஞர்களும் வந்திருந்தனர்.

38 வருடங்களுக்கு முன்பு, என் கிராமத்தில் (கோவிந்தபுரம்) நான் தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு, ஸ்ரீமுருகன் டாக்கீஸில் ஒரு ரூபாய் டிக்கெட் வாங்கி தரையில் அமர்ந்து படம் பார்த்த, அந்த இனிய நினைவுகளை மீட்டெடுத்து அனுபவிக்க முடிந்த குதூகலத்தில் தான் மூழ்கியுள்ளேன். மேலும் இந்த ஒரு அனுபவம் என்னை உணர்ச்சிவசப்படுத்தியது.

கீற்று கொட்டகை மீண்டும் தனது இழந்த பெருமையை மீட்டெடுத்தது போன்ற உணர்வு என்று சொல்லிச் சிலிர்க்கிறார்.

தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு முயற்சியை யாரேனும் முன்னெடுத்தால் அதற்கு தமிழ்நாடு அரசும் உதவி செய்தால் இக்கால இளைஞர்களுக்கு வியப்பூட்டும் புதிய அனுபவம் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை.

சிவகுமார் ஷோபா உட்பட பலர் நடிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏணிப்படிகள். அப்படத்தில் இடம்பெற்று காலத்தால் அழியாத இனம்புரியாச் சிலிர்ப்பை ஏற்படுத்தி வரும், ஏனுங்க மாப்பிள்ளை என்னெ நெனப்பு, பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து ஆகிய பாடல்கள் கொட்டகையின் கீற்றுகளைத் தாண்டி அக்கம்பக்கத்து மக்களையும் ஆட்கொண்ட அனுபவம் கிடைக்கும்.

செய்வார்களா?

Related Posts