சக்ரா படத்துக்குத் தடை கேட்டு வழக்கு – பெரிய நிறுவனத்தின் முடிவால் ரிலீசில் சிக்கல்
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக அவரே தயாரித்துள்ளார்.
2020 செப்டெம்பர் மாதம் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நேரத்தில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விஷால் மீதும் இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் மீதும் வழக்கு தொடுத்தது.
அந்நிறுவனத்துக்கு 8.29 கோடி தரவேண்டியதிருக்கிறது என்றும் அதைக் கொடுக்காமல் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரியது டிரைடெண்ட் நிறுவனம்.
அந்நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க விஷால் ஒப்புக் கொண்டதால் அச்சிக்கல் தீர்ந்தது என்று சொன்னார்கள்.
ஆனால், இப்போது ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது என்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக லைகா நிறுவனத்தில் இருபத்தைந்து கோடி ரூபாய் விஷால் வாங்கியிருந்தாராம். அப்பணத்தைத் திருப்பித் தரவும் இல்லை, அப்பணத்துக்கு ஈடாக படம் நடிப்பது என்று சொன்ன சொல்லையும் காப்பாற்றவில்லையாம்.
இதுதொடர்பாக பலமுறை விஷாலை அணுகியும் அவர் சரியாகப் பதிலளிக்கவில்லையாம்.
இதனால் படத்துக்குத் தடை கேட்டு நீதிமன்றத்தை அணுகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எனவே, பிப்ரவரி 19 ஆம் தேதி சக்ரா படம் வெளீயாவது சந்தேகம் என்கிறார்கள்.