கவினின் ப்ளடிபெக்கர் வெளியீட்டுத் தேதி?
நடிகர் கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் நெல்சன் தனது‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.ஆனாலும் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதில் தாமதம் ஆகிறது.
ஏன்?
இப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை சுமார் பனிரெண்டு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.கருடன் உள்ளிட்ட படங்களை வெளியிட்ட ஃபைவ்ஸ்டார் செந்தில் குழுவினர் வாங்கியிருக்கிறார்கள்.இதனால் படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யும் பொறுப்பு நெல்சனிடமிருந்து அவர்கள் கைக்குப் போயிருக்கிறது.
கவினின் முந்தைய படமான ஸ்டார் படத்தை விட இருமடங்கு விலை அதிகம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.இதனால் இப்படத்தை சரியான தேதியில் வெளியிட்டால்தான் போட்ட பணத்துக்குப் பாதுகாப்பு என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இன்னும் இந்தப் படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன விற்பனை ஆகவில்லை.அதனால் இயக்குநர் நெல்சனும் படத்தை வெளியிடுவதில் அவசரம் காட்டவில்லை.தற்போது இவ்விரு உரிமைகளுக்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் வெளியீட்டுத் தேதி குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செப்டம்பர் 5 ஆம் தேதி விஜய் படம் வெளியாகவிருக்கிறது.செப்டம்பர் 27 ஆம் தேதி கார்த்தியின் மெய்யழகன் வெளியாகவிருக்கிறது.
இதனால் நான்கைந்து நாட்கள் தொடர்விடுமுறை கிடைக்கும் ஆயுதபூசையை ஒட்டி அக்டோபர் பத்தாம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடுகிறார்கள்.அந்தத் தேதியீல் வெளியாவதாகச் சொல்லப்பட்ட சூர்யாவின் கங்குவா படம் திட்டமிட்டபடி வெளியாகாது தள்ளிப்போகும் என்றொரு தகவல் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
அதனால் அக்டோபர் பத்தாம் தேதி படத்தை வெளியிட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஒருவேளை அந்தத் தேதியில் ரஜினியின் வேட்டையன் வெளியாகும் என்றால் அக்டோபர் 31 தீபாவளியன்று படத்தை வெளியிடலாம் என்றும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம்ரவியின் பிரதர் ஆகிய படங்கள் வெளியாவதாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.இரண்டில் ஒன்று வராமல் போகலாம் இரண்டுமே வந்தாலும் தீபாவளி என்பதால் நம் படமும் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்.
அதற்குள் இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் விற்பனை ஆகிவிடும் என்பதால் நெல்சனும் இதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறார்.
ஆக, அக்டோபரில் ப்ளடிபெக்கர் வெளியாகிவிடும் என்பது உறுதியாகிவிட்டது.










