பிக்பாஸ் 4 இன் வெற்றியாளர் ஆரி – அடுத்த இடங்கள் பெறுவோர் விவரம்
பிக்பாஸ் 4 இல் ஆரியின் வெற்றியைக் கடவுளாலும் தடுக்க முடியாது.
இது ஓர் ஆரி ஆதரவாளனின் பதிவல்ல. நார்வே நாட்டில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியினை அவதானிக்கும் ஓர் ஈழத் தமிழனின் பதிவு.
பிக்பாஸ் சீசன் 4 இன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ஆரியே வெற்றியாளர் என்பது மக்கள் கணிப்பாக இருக்கிறது. கடைசி நேரத் திருப்பம் ஏதும் நடந்து விடுமா? சேனல் திருகுதாளம் ஏதும் செய்யுமா? என்ற சந்தேகத்தில் மக்களும், சமூகவலைத் தளங்களும் ஆரிக்காகக் காவலர்களாகக் கண்விழித்திருக்கிறார்கள்.
எனது பார்வையில் பிக்பாஸ் கடந்த வாரமே நிறைவடைந்து விட்டது. திரைப்படங்களில் பொதுவாக உச்சக்கட்டத்தில் சண்டை வரும். நாயகன் வில்லனைச் சண்டையில் வெற்றி கொள்வான். வில்லன் திருந்துவான் அல்லது கொல்லப்படுவான்.
இந்த பிக்பாஸ் 4 இல் நாயகன் வில்லனுக்காகக் கண்ணீர் விட்டான். வில்லன் மனமாற்றம் அடைந்து திருந்தினான் அல்லது திருந்தியவனாகக் காட்டிக் கொண்டான். இந்தத் திரைப்படப் பார்மிலாவுடன் பிக்பாஸ் முடிவுக்கு வந்து விட்டது. இவ் வாரம் நடப்பதெல்லாம் சில திரைப்படங்களில் உச்சக் கட்டத்துக்குப் பின்னரும் உப்புச் சப்பில்லாது தொடரும் காட்சிகள் போல நடப்பவைதான். இதில் பெரிய சுவாரசியம் ஏதும் வரப் போவதில்லை.
இம் முறை ஆரியே வெற்றியாளர் என்பது முடிவாகி விட்டது. இதனை மக்கள் தீர்மானித்து விட்டார்கள். வெற்றியாளரை சனலோ, கமலோ, அல்லது ஸ்பொன்சர்களோ தீர்மானிப்பற்கு இனி இடமேதுமில்லை. அந்தளவுக்கு மக்கள் ஆதரவில் ஆரிக்கும் ஏனைய போட்டியாளர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி மிக அதிகம்.
விஜய் தொலைக்காட்சி எந்தக் காரணத்தாலும் வெற்றியாளரை மாற்றியமைத்தால் எதிர்காலத்தில் தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்த முடியாது. கமல் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டி வரும்.
சேனல் என்ன கடவுளர்களால் கூட ஆரியின் வெற்றியை மாற்றியமைத்து விட முடியாது. ஆரியை வெற்றி பெற வைத்திடு கடவுளே என மன்றாடுபவர்களதும் நேர்த்தி வைப்பவர்களினதும் தொகையும் மிக மிக அதிகம். தனது பக்தர்களின் வேண்டுதலைப் பகவானால் கைவிடத்தான் முடியுமா?
ஆர்வமுள்ளவர்கள் இரண்டாவது இடம் யாருக்குக் கிடைக்கும் என்பதில் வேண்டுமானால் ஆர்வம் காட்டலாம். மக்கள் வாக்கு மதிக்கப்படுமானால் பாலா இரண்டாவது இடம் பெறுவார். ஏதிர்பாராததை எதிர்பார்க்க வைப்பதற்காக சேனல் ரியோவையோ அல்லது ரம்யாவை இரண்டாவது இடத்துக்கு கொண்டும் வரலாம். அவ்வளவுதான். இதற்கு மேல் எதுவுமில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத் தடவை மக்கள் காட்டும் துடிப்பைப் பார்க்க ஒரு பக்கம் கவலையாகவும் பரிதாபமாகவுமாகவும் இருக்கிறது. மறு பக்கம் மக்கள் உணர்வை அனுதாபத்துடன் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
மக்கள் ஆரியைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக உணர்கிறார்கள். அவன் நேர்மையாகத் திறமையாக இயங்குகிறான் என அடையாளம் காண்கிறார்கள். அவனுக்கு ஏனைய போட்டியாளர்களால் தீங்கு நடந்து விடுமோ? அவனுக்கு எதிராக சேனல் அநீதி இழைத்து விடுமோ என்று கலங்குகிறார்கள். ஒரு நல்லவனைப் பாதுகாப்பதற்காகத் துடிக்கிறார்கள். ஆரி கவலையடையும் போது இவர்களும் கவலையடைகிறார்கள். ஆரி கோபப்படும்போது இவர்களும் கோபப்படுகிறார்கள்.
இந்த உறவு ஆற்றுகையாளன் – பார்வையாளன் என்ற உறவைக் கடந்து இரத்த உறவு போன்றதொரு நெருக்கத்தை அடைந்து விடுகிறது. தனித்து விடப்பட்டிருக்கும் ஒரு நல்லவனுக்கு தாங்களே பாதுகாப்புக் கவசம் என்று உணர்ந்து மக்கள் தமது ஆதரவை பெருமளவு வழங்குகிறார்கள். பெருந்தொகையில் தமது வாக்கை அளிக்கிறார்கள்.
இந் நிலை ஏற்படுவதற்கு மக்கள் மனங்களில் இயல்பாகக் குடியிருக்கும் நல்ல குணமே காரணம். பலர் மக்களில் உள்ள தீய குணங்களைப் பற்றி முன்னிலைப்படுத்திப் பேசுவர். உலகில் வாழும் மக்களின் நல்ல குணங்கள் தீய குணங்களை விடக் கூடுதலாக இருப்பதானல்தான் உலகம் ஒப்பீட்டளவில் அமைதியாக இருக்கிறது.
மக்கள் மத்தியில் இத்தகைய உணர்வுக் கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய முறையிலேயே பிக்பாஸ் 4 எடிட் செய்யப்படுகிறது. காதலும் மோதலும் மக்களைக் கவரும் அல்லது கவனத்தை ஈர்க்கும் இரண்டு உணர்வுமயப்பட்ட செயல்கள். இத் தடவை காதல் அவ்வளவு சோபிக்கவில்லை. இதனால் மோதலை மிகைப்படுத்தி விட்டார்கள். மக்கள் இதனை ஒரு விளையாட்டாகவோ அல்லது திரைப்படமாகவோ பாரத்து விட்டு இலகுவாக் கடந்து போய் விடுவது நல்லது. இதற்கு நாம் நம்மைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.
பிக்பாஸ் 4 இல் ஆரி வெற்றி பெறுவது நேர்மையாகச் சிறப்பாகக் கடும் உழைப்பை வழங்கினால் வெற்றி கிடைக்கும் என்ற செய்தியினை சமூகத்துக்கு வழங்கும். இது சமூக வளர்ச்சிக்கு நல்லது. சமூகச் செயற்பாட்டாளராக ஆரி செய்யும் நற்காரியங்களுக்கு மேலும் வலுக் கிடைக்கும். இதுவும் சமூகத்துக்குப் பயன் தரும். ஆரி ஒரு நடிகராக வெற்றிடைய இவ் வெற்றி உதவக் கூடும். இதேவேளை சினிமாவில் எல்லாவகையான பாத்திரங்களையும் ஏற்று நடித்து சிறப்பான நடிகராகத் தன்னை நிலைநிறுத்த அவரது நல்லவன் இமேஜ் சற்று இடையூறாகவும் இருக்கக் கூடும்.
வெற்றியாளன், தமிழ் உணர்வாளன், சமூகச் சேவையாளன், தமிழகத்தின் தனயன், ஈழத்து மருமகன் ஆரிக்கு ஈழத் தமிழர் சார்பில் எனது மனமார்ந்த நல்வாழ்த்து! வளரட்டும் உனது தமிழ்ப்பணி. தொடரட்டும் உன் சமூகத் தொண்டு. வாழ்க! வளர்க!!
– ஈழத்திருமகன்











