ஆரி வென்றது எப்படி? -பிக்பாஸ் 4 நிகழ்ச்சி குறித்த ஒரு பார்வை
2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டும் கமலே தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.
இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள். ஒவ்வொரு வாரத்துக்கு இடையிலும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள்.
இறுதிப் போட்டியில் ஆரி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். சனவரி 17 அன்று இறுதிப் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் முதலில் சோம், பின்பு ரம்யா பாண்டியன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ரியோ மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முதல் இடத்துக்கு ஆரி மற்றும் பாலாஜி இருவருக்கும் கடும் போட்டி இருந்தது. அதில் ஆரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஆரிக்கு ரசிகர்களானவர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
ஆரி வென்றது எப்படி? என்பது குறித்தும் பிக்பாஸ் 4 குறித்தும் ஓர் அலசல்….
நிகழ்ந்த 4 சீசன்களில் மிக மொக்கையான சீசனாக பலராலும் கணிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 முடிந்துவிட்டது. முடிவுத் தேதிக்கு முன்பே வெற்றியாளர் யார் என்பதை மக்கள் கணித்துவிட்ட இந்த சீசன் ஒளிபரப்பு வகையிலும் தோல்விதான். எவிக்ட் ஆகிப் போகிறவர் யாரென்பது இந்த சீசனில்தான் மக்களுக்கு முன்பே தெரிந்து போனது. அவ்வகையில் இரண்டாம் இடத்திலிருப்பவரை விட 4 மடங்கு அதிகமாக ஓட்டுகள் பெற்று ஆரி வெற்றியடைந்திருக்கிறார்.
ஆரி- நெடுஞ்சாலை என்ற சுமாரான படத்தின் மூலம் வெளித்தெரிந்த ஆரியின் நீதி நேர்மை நியாயத்துக்கு கிடைத்த பரிசல்ல இது. ஆரி நேர்மையாகவெல்லாம் விளையாடவில்லை. ஆனால் சாமர்த்தியமாக விளையாடினார். இந்த 100 நாட்களுக்குள் உருவாக்கப்படும் எமோஷனல் பாண்டிங்ஸ் எதுவும் எதற்கும் உபயோகப்படாது என்பதை அறிந்து களத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அதுவே மற்ற போட்டியாளர்களுக்கு பயத்தையும் எரிச்சலையும் தந்தது. இதை ஆரி தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். இதற்கு முன் பிக்பாஸ் டைட்டில் வென்றவர்கள் யாரும் உருப்பட்டதில்லை என்பதை ஆரி நினைவில் கொண்டால் நல்லது.
இந்த சீசனில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் மக்களுக்கு முன்னரே தெரிந்தவர்கள்தான். சோம், பாலாவைத் தவிர. அவ்வகையில் இருவரும் ஃபைனலுக்கு முன்னேறியது அவர்களின் கெரியருக்கான நல்ல விளம்பரம்.
இந்த சீசனின் அநியாய பலிகடா அறந்தாங்கி நிஷா. நகைச்சுவை உணர்வுமிக்கவர். பட்டிமன்றப் பேச்சாளர். இருந்தும் போல்டாக விளையாடாமல் மக்களால் வெளியேறியதற்கு ஒரே காரணம் அர்ச்சனா.
இந்தப் போட்டியில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவரும் எரிச்சலை உருவாக்கியவரும் அர்ச்சனாவே. தான் ஜெயிக்க அன்பு வலை உருவாக்கி மற்றவர்களை வீழ்த்தினாரா, இல்லை தன்னைச் சார்ந்தவர்கள் வெல்ல இந்த ஸ்டார்ட்டஜியை உருவாக்கினாரோ தெரியாது. விளைவு அவரும் தோற்று சார்ந்தவர்களும் தோற்றனர். முதல் சீசனில் ஜூலிக்குக் கிடைத்த கெட்ட பெயர் இன்றளவும் மாறவில்லை. அர்ச்சனாவுக்கும் அப்படியே.
இடுப்பு மடிப்பு தெரிய மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்களினால் பிரபலமான ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டில் அதுபோல் தன்னை எக்ஸ்போஸ் செய்யவில்லை. ஆனால் போட்டி ஆரம்பத்தில் கமலாலும் சிலாகிக்கப்பட்ட அவரின் புன்னகை போகப்போக எரிச்சலாகவும் அருவருப்பாகவும் மாறியது கொடுமை. ஆரியை மட்டுமே குறிவைத்து இயங்கிய அவரின் செயல்பாடுகள் இணையதளங்களில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டு விட்டன. இனி மீள்வது சிரமம்.
இந்த சீசனின் சொல் ஒன்று செயல் ஒன்றாக எரிச்சலை ஏற்படுத்தியவர்கள் இருவர். சம்யுக்தா, ரியோ. ஒரு குழந்தைக்கு அம்மா எனத் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர்…ஆரி மீதிருக்கும் கோபத்தை மோசமான முறையில் வெளிப்படுத்தினார். தனது அழகு மற்றும் சூப்பர் மாடல் இமேஜை அப்பட்டமாக வெளிப்படுத்தியவர். எவிக்ட் ஆகிப் போன நாளன்று மேடையில் கமல்ஹாசனை சந்தித்தவர் போட்டிருந்த ஜாக்கெட் அதற்கொரு உதாரணம்.
வீட்டினுள் நுழைந்த முதல் நாளிலிருந்து வெளியேறிய நாள் வரை கேமிரா சென்ஸிலேயே இருந்தவர் ரியோ. அதனாலே அவரின் கேம் பாழ்பட்டது. நல்ல சென்ஸ் ஆஃப் ஹியூமர் உள்ள ரியோ காலியானது இந்த விளையாட்டுக்குத் தேவையற்ற செண்டிமெண்ட்ஸால். தன்னைத் தெளிவாய் எவ்விடத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பேக்கேஜ் வைத்துக்கொண்டு ஆரியைக் குற்றம் சாட்டியவர் சகலரிடமும் ஜாக்கிரதை உணர்வோடிருந்தார்… தனது கேங்கைத் தவிர. கூடவே அர்ச்சனாவின் அன்பும் அரவணைப்பும் அவரை வீழ்த்தியது.
சீசனின் பரிதாபத்துக்குரியவர் சுசித்ரா. பாலாஜியுடன் ஜெயிலில் இருந்தபோது தனியாய் அவர் பாடிக்கொண்டிருந்த உன்னை நான் அறிவேனுக்கு பலரும் நெகிழ்ந்துபோனதென்னவோ உண்மை. தன்னை வெறுப்பவர்களிடம் மறுப்பவர்களிடம் மீண்டும் மீண்டும் அடைக்கலம் தேடுவதென்பது நரகம்.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஷோவைப் பார்த்துவிடும் நான், பாலாஜி அதீத கோபத்தில் மைக்கை மெத்தையில் ஓங்கி அடித்த நாளிலிருந்து நிறுத்திவிட்டேன். அந்த வகையில் பாலாஜி மீது விழுந்த நெகடிவ் இமேஜ் அவ்வளவு எளிதில் மாற வாய்ப்பில்லை. இவருக்கு கிடைக்கும் சினிமா வாய்ப்புகளினால் இவரே மாற்றிக்கொண்டால்தான் உண்டு.
அடுத்த சீசனிலாவது ஒப்புக்குச் சப்பாணியாய் கண்டெஸ்டண்ட் பிடித்துப் போடாமல் சுவாரசியமானவர்களைத் தேர்ந்தெடுப்பது விஜய் டிவிக்கு நல்லது.
.
– கணேசகுமாரன்











