சினிமா செய்திகள்

ஜெயிலருடன் வெளியாகிறது அயலான் புதிய டீசர்?

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடிப்பில் இன்றுநேற்றுநாளை புகழ் ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவி நீரவ்ஷா, இசை ஏ.ஆர்.ரகுமான்.

கொரோனா உட்பட பல சிக்கல்களால் தாமதமான இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்காக கணினி வரைகலைக்காட்சிகள் தொடர்பான வேலைகள் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே அப்படத்தின் டீசர் ஒன்று வெளியாகியிருந்தது. இப்போது புதிய டீசர் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்களாம்.

அந்த டீசரை ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்துடன் இணைத்து அப்படம் ஓடக்கூடிய அனைத்துத் திரையரங்குகளிலும் திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன என்று விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பேச்சு.

அதேசமயம், இதுதொடர்பாக தயாரிப்புத் தரப்பில் சொல்லப்படுகிற தகவல் என்னவென்றால்?, அயலான் புதிய டீசர் விரைவில் வெளியாகவிருப்பது உண்மை ஆனால் அது ஜெயிலர் படம் வெளியாகும்போது வரும் என்று சொல்லமுடியாது என்கிறார்கள்.

டீசர் வேலைகள் ஜெயிலர் வெளியீட்டுக்குள் முடிந்துவிடுமா? என்கிற சந்தேகம் இருப்பதால் தயாரிப்புத்தரப்பில் இப்படிச் சொல்கிறார்கள்.அதேசமயம் அதற்குள் அதை முடித்து ஜெயிலரோடு வெளியிட்டுவிடவேண்டுமென்று வேகமாக வேலை செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

எது சரி? என்பது ஜெயிலர் வெளியாகும்போது தெரிந்துவிடும்.

Related Posts