இரண்டு மாதங்கள் தள்ளிப்போனது அயலான்
இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
கொரோனா உட்பட பல சிக்கல்களால் தாமதமான இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்காக கணினி வரைகலைக்காட்சிகள் தொடர்பான வேலைகள் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி பல காட்சிகளை எடுத்திருந்தார்கள்.
4500 க்கும் மேற்பட்ட வரைகலைக் காட்சிகளைக் கொண்ட முதல் முழு நீளத் திரைப்படம் என்னும் பெருமை பெற்றிருக்கும் இப்படம் அதனாலேயே மேலும் தாமதமாகிறது.
2023 தீபாவளியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் இன்னும் இரண்டு மாதங்கள் தள்ளிப்போய் 2024 பொங்கல் நாளையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கேஜேஆர் நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை சமூகவலைதளங்கள் மூலம் வெளியிட்டிருக்கிறது.
இதனால் ஏமாற்றமடையும் இரசிகர்களுக்கு ஆறுதலாக இன்னொரு செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அக்டோபர் முதல்வாரத்தில் அயலான் படத்தின் புதிய குறுமுன்னோட்டம் வெளியிடப்படும் என்கிற அறிவிப்புதான் அது.
பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்த இந்தப்படம் இப்போது புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. எனவே இப்போது அறிவிக்கப்பட்ட தேதியில் உறுதியாகப் படம் வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.











