ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படச்சிக்கல் – என்ன நடந்தது?
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் தொடக்கவிழா பிப்ரவரி 14 அன்று எளிமையாக நடந்தது.பிப்ரவரி 15 ஆம் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்தப்படத்தில் நாயகியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் ஒரு சிக்கல் உருவானது.
இப்படத்தின் ஒளிப்பதிவுக்கருவி உள்ளிட்ட படப்பிடிப்புக்கான உபகரணங்களை ஆந்திர மாநிலத்திலிருந்து கொண்டு வந்து படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.
இதற்கு இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அச்சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்புக்கு வெளிமாநிலங்களிலிருந்து உபகரணங்களைக் கொண்டுவரக்கூடாது என்கிற விதிமுறை இருக்கிறது. அதை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் செயல்பட்டிருக்கிறார்கள். உடனே இதை நிறுத்தவேண்டும், இல்லையெனில் எந்தப்படத்துக்கும் நாங்கள் பணிபுரியமாட்டோம் என்று அறிவித்தனர்.
அதனால் பிப்ரவரி 16 முதல் திரையுலகில் வேலைநிறுத்தம் என்கிற பரபரப்பு செய்தி பரவியது.
ஆனால், அதுபோல் எதுவும் நடக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடக்கிறது. நேற்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயன் பிறந்தநாள். அதையொட்டி அந்தப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.
இதன்மூலம் அந்தப்படத்தின் படப்பிடிப்பு உட்பட எந்தப்படத்தின் படப்பிடிப்பும் நிற்கவில்லை என்பது தெரிகிறது.
அப்படியானால் அவுட்டோர் யூனிட் சங்கம் எழுப்பிய புகார் என்னவானது?
இந்தப்படத்தின் தயாரிப்பாளர் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்தவர் என்பதால் இந்தப்படத்துக்கும் அங்குள்ள தாஹிர் என்கிற நிறுவனத்திலிருந்தே உபகரணங்களைக் கொண்டுவந்துவிட்டார்கள்.
இங்குள்ள உபகரணங்களைத்தான் பயன்படுத்த வேண்டும், வெளிமாநில உபகரணங்களை வைத்து ஒருநாள் கூடப் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என அவுட்டோர் யூனிட் சங்கம் கூறியது.
அதற்கு படக்குழுவினர், நாங்கள் பல வாரங்கள் திட்டமிட்டு படப்பிடிப்பை ஏற்பாடு செய்துள்ளோம். ஒருநாள் படப்பிடிப்பு இரத்தானால் பத்து இலட்சம் முதல் பதினைந்து இலட்சம் வரை இழப்பு ஏற்படும். எனவே படப்பிடிப்பை இரத்து செய்யவியலாது. அதேநேரம், எங்கள் படப்பிடிப்பு இம்மாத இறுதிவரை நடக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. எங்களுக்குச் சில நாட்கள் அவகாசம் கொடுங்கள் அதாவது பிப்ரவரி 20 வரை அவகாசம் கொடுங்கள் அதற்குள் எங்களுக்குத் தேவையான உபகரணங்களை இங்கேயே எடுத்துக்கொள்கிறோம் என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள்.
அந்த உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டதால் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டது.படப்பிடிப்பும் தொடர்கிறது.
இன்னும் இரண்டுநாட்களில் இங்கிருந்தே படப்பிடிப்பு உபகரணங்களை எடுத்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.











