சினிமா செய்திகள்

மண்டேலா தந்த ஏற்றம் – உற்சாகத்தில் ஜி.எம்.சுந்தர்

ஏப்ரல் 4 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியிலும் அன்றே இணையத்திலும் வெளியானது யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருந்த மண்டேலா திரைப்படம்.

புதுஇயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்த அப்படம் அவருக்கு மட்டுமின்றி படத்தில் நடித்த பலருக்கும் புதிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.

குறிப்பாக அரசியல் தலைவர் ரத்தினமாக நடித்துள்ள ஜி.எம்.சுந்தருக்குப் பெரும் வரவேற்பு.

படம் பார்த்தோர் அனைவரும் அவருக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள்.

ஜி.எம்.சுந்தர்,இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்நடித்த புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடிகரானவர்.

அதற்கடுத்து கமல் தயாரித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு மற்றும் சத்யா படங்களில் முக்கிய வேடமேற்றார்.

அதன்பின் விஜயகாந்த்உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்
படங்களில் நடித்தார்.

ஆனாலும் அவருக்குப் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. வருடத்துக்கு ஒரு படம் என்கிற அளவில்தான் நடித்துக் கொண்டிருந்தார்.

இப்படி ஓராண்டு ஈராண்டல்ல கால் நூற்றாண்டுக் காலம் ஓடிவிட்டது.

அதற்காக அவர் கலங்கவில்லை, நடிப்பே வேண்டாமென ஓடிவிடவில்லை,ஓய்ந்திருக்கவும் இல்லை.

கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி கொடுப்பது, நாடகங்களில் நடிப்பது, உலகத் திரைப்படங்களை ஓடி ஓடிப் பார்ப்பது என கலைத்துறைக்கே தன்னை ஒப்புக
கொடுத்தார்.

அதன்விளைவு, 2016 இல் வெளியான நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் அவர் ஏற்றிருந்த திலகர் எனும் வேடம் அவரை உயிர்ப்பித்தது.

அதன்பின், பொதுவாக எம்மனசு தங்கம், சீதக்காதி, மகாமுனி ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

அவற்றின் பலனாக மண்டேலா படம் கிடைத்தது.

அப்படத்தின் வெற்றி அவருக்குப் பல புதிய உயரங்களைக் கொடுத்திருக்கிறது.

ரத்தினம் எனும் வேடத்தின் பெயருக்கேற்ப பண்பட்ட நடிப்பில் ரத்தினமாக ஜொலித்தார்.

இவரைத் தெரிந்து பார்த்தோர் பாராட்டித்தள்ள தெரியாமல் பார்த்தோர் யாரெனத் தேடி வாழ்த்த, கால் நூற்றாண்டுக்கும் மேல் காத்திருந்த கலைஞன் கண்ணீர் நன்றிகளைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.

மண்டேலா படத்துக்குப் பிறகு முன்னணி இயக்குநர்கள் மற்றும் முன்னணி நாயகர்களின் படங்களில
நடிக்க அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்தப்படம் பார்த்த பின்பு,மண்டேலா இயக்குநர் போலவே பல புதியவர்கள் தங்கள் படங்களில் நடிக்க அவரை அணுகியிருக்கிறார்களாம். அவர்களில் ஒருவர், இவரையே கதையின் நாயகனாக்கியிருக்கிறாராம்.

இவ்வளவு ஆண்டுகள் தொய்வையும் சரிகட்டும் வகையில் இனி வரும் ஆண்டுகள் இருக்கும் என கண்கள் மின்னச் சொல்கிறார்.

உண்மையான மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு ஆப்பிரிக்க அதிபரானார்.

இந்த மண்டேலா திரைப்படம் கால்நூற்றாண்டு மறைந்திருந்த கலைஞனை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்திருக்கிறார்.

Related Posts